Published : 20 Feb 2015 05:42 PM
Last Updated : 20 Feb 2015 05:42 PM

கவுரவக் கொலைகளைத் தடுக்க புதிய சட்டம் தேவையில்லை: பேரவையில் முதல்வர் விளக்கம்

கவுரவக் கொலைகளைத் தடுக்க தற்போதுள்ள சட்டங்களே போதுமானவை என்பதால், புதியதாக சட்டம் இயற்றத் தேவையில்லை என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஆளுநர் உரையின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது சாதி அடிப்படையில் மோதல், பதற்றம் ஏற்படுவதையும் கவுரவக் கொலைகள் நடப்பதையும் தடுப்பது குறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.

அப்போது அவர், "தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு நன்கு பராமரிக்கப்பட்டு வருவதோடு, சாதி, சமய பூசல்கள் ஏதுமின்றி அமைதியும், நல்லுறவும் பேணப்பட்டு வருகிறது.

சாதி மோதல்கள் ஏற்பட வாய்ப்பிருந்த திருவிழாக்கள் முக்கிய நினைவு நாட்கள் மற்றும் நிகழ்ச்சிகளின்போதும், மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் குறிப்பிட்ட சமூதாயத்தினரிடையே கோவில் வழிபாட்டில் உரிமை கோருவது குறித்து பிரச்சினைகள் ஏற்பட்டபோதும், ஒரு சமூகத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்ததையடுத்து ஏற்பட்ட சம்பவங்களை தொடர்ந்து மாநிலத்தில் சில மாவட்டங்களில் ஏற்பட்ட சூழ்நிலையின்போதும், காவல் துறையினர் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு சாதி மோதல்கள் ஏற்படாமல் தவிர்த்தனர்.

தமிழக காவல்துறையினர், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் ரவுடிகள், சமூக விரோதிகள், முக்கியத்தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துபவர்கள், அவமதிப்பவர்கள், சாதி மேதல்களில் ஈடுபடுபவர்கள், தூண்டுபவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர்கள் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்து வருகின்றனர்.

காவல்துறையினர், மாநிலத்திலுள்ள அனைத்து சாதி அமைப்புகள், சாதித் தலைவர்கள், சாதிப் பிரச்சினைகளை தூண்டுவோர்கள் ஆகியோர்களது நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்தும், பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ள துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல், சுவர் விளம்பரங்கள் செய்தல், சுவரொட்டிகள் ஒட்டுதல், ஆயுதங்கள், வெடிமருந்துகள் சேகரித்தல் ஆகியவை குறித்து நுண்ணறிவுத் தகவல்கள் சேகரித்தும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

ஒவ்வொரு காவல் நிலைய சரகத்திற்குள்ளும் சாதிப் பிரச்சினை எழ வாய்ப்புள்ள பகுதிகள், திருவிழாக்கள், சமூக விரோதிகள் மற்றும் சாதி வெறியர்கள் குறித்த பட்டியல் தயார் செய்து, அவர்கள் மீது குற்றவியல் நடைமுறை விசாரணை சட்டம் 107, 108, 110 மற்றும் 145 பிரிவுகளின்படி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

சாதி அமைப்புகள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்து, தேவைப்படின், காவல் சட்டம் பிரிவு 30(2), குற்றவியல் நடைமுறை விசாரணை சட்டம் 144-ன் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு சாதி ரீதியாக மோதல் ஏதும் நடவாமல் பார்த்து வருகிறார்கள்.

மேலும், கோவிலுக்குள் நுழையக் கோரும் உரிமைப் பிரச்சனை, நடைபாதை பிரச்சனை, மயான பிரச்சனை, அரசு நிலத்தில் உரிமை கோரும் பிரச்சனை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து, அமைதிக்குழுக்களை ஏற்படுத்தி அவ்வப்போது, அப்பிரச்சனைகளை மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு, உடனுக்குடன் தீர்த்து வருகிறார்கள். மேலும், அனுமதியின்றி சாதித் தலைவர்களின் சிலைகளை நிறுவாமல் பார்த்து கொள்வதோடு, கம்பி வலை பாதுகாப்பில்லாத சிலைகளுக்கு கம்பி வலைகள் அமைப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

சாதி ரீதியான பூசல்கள் ஏற்படும்போதும், இரு வேறு சமூகத்தினருக்கிடையே காதல் தொடர்பாக ஏற்படும் பிரச்சனைகளின்போதும், ஆலய வழிபாடு, மயான வழிபாதை மற்றும் பொது மயானத்தை பயன்படுத்துதல், பொது குடிநீர் குழாய்களை பயன்படுத்துதல் போன்றவற்றில் இரு சமூகத்தினரிடையே ஏற்படும் மோதல்களின் போதும், காவல்துறையினர் தற்போதுள்ள சட்டங்களின்படி வழக்கு பதிவு செய்து, தக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆதிதிராவிட மக்கள் பாதிக்கப்பட்டால், குடியுரிமைப் பாதுகாப்பு சட்டம், 1955 மற்றும் தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989படியும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதோடு, அவர்களுக்கு சட்டப்படியான நஷ்டஈடும் அளிக்கப்பட்டு வருகிறது.

மாநிலத்தில் கவுரவக் கொலைகள் எதுவும் நடைபெறவில்லை. இரு சமூகத்தைச் சேர்ந்த இருபாலரிடையே ஏற்படும் காதல் சம்பவங்களில் ஏற்படும் பிரச்சினைகளில் தற்கொலை செய்து கொள்வது, சந்தேக முறையில் மரணமடைவது போன்ற சம்பவங்கள் மட்டுமே எப்பொழுதாவது நடைபெறுகின்றன. அச்சம்பவங்களில் காவல்துறையின் சட்டப்படி அதற்கு காரணமானவர்கள் மீது தற்போது நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின்படி கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

எனவே சாதி மோதல்களை தடுக்கவும், சாதிப் பிரச்சனைகளில் ஏற்படும் மரணங்களைத் தடுக்கவும் தற்போதுள்ள சட்டங்களே போதுமானவையாகும். மேலும் புதியதாக சட்டம் இயற்றத் தேவை எதுவும் தற்போது எழவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x