Published : 10 Feb 2015 10:05 AM
Last Updated : 10 Feb 2015 10:05 AM

பன்றிக் காய்ச்சல் தாக்காமல் இருக்க கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்: சுகாதாரத் துறையினர் அறிவுரை

கைகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்றாக கழுவினால், பன்றிக் காய்ச்சல் பரவுவதை பெருமளவில் தடுக்க முடியும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி, பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி, மருத்துவமனை டீன் டாக்டர் விமலா, மருத்துவமனை அதிகாரி டாக்டர் இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தின் முடிவில் டாக்டர் கீதா லட்சுமி, டாக்டர் குழந்தைசாமி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பன்றிக் காய்ச்சல் ஒரு சாதாரண ஃபுளூ காய்ச்சல் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே அதனைக் கண்டு யாரும் அச்சப்பட வேண்டாம். பன்றிக் காய்ச்சலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உட்பட அனைத்து அரசு மருத்துவமனை களிலும் சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 71 வென்டிலேட்டர்கள், 824 பாதுகாப்பு கவச உடைகள் வாங்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட் டுள்ளன. கிண்டி கிங் இன்ஸ்டிடியூட், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 12 தனியார் ஆய்வகங்களில் பன்றிக் காய்ச்சல் பரிசோதனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பன்றிக் காய்ச்சலுக்கு தேவையான டாமி ஃபுளூ மாத்திரைகள் தேவையான அளவில் அரசு மருத்துவமனைகளில் கையிருப்பில் உள்ளன. 101 டிகிரிக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும். காய்ச்சல் வந்தவர்கள் தாங்களாகவே மாத்திரைகளை வாங்கி சாப்பிட வேண்டாம்.

பொது இடங்களுக்கு சென்று வந்தவுடன் கைகளை நன்றாக சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் பன்றிக் காய்ச்சல் வருவதை 80 சதவீதம் வரை தடுத்துவிட முடியும். இருமல், தும்மல் வரும்போது கைக்குட்டையால் வாயை மூட வேண்டும். வெளியே செல்லும் போது முகத்தில் முகக் கவசம் அணிந்து செல்வது நல்லது.

ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பன்றிக் காய்ச்சல் தீவிரமாக உள்ளது. எல்லைப் பகுதியில் நமது சுகாதாரக் குழுவினர் முகாமிட்டு தமிழகத்துக்கு வருபவர்களை பரிசோதனை செய்கின்றனர். இங்கு உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சுகாதாரக் குழுவினர் விழிப்புடன் பணியாற்றுகின்றனர். தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் இப்போது வரை 118 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை மற்றும் கோவையில் தற்போது 7 பேர் பன்றிக் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பொது இடங்களுக்கு சென்று வந்தவுடன் கைகளை நன்றாக சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் பன்றிக் காய்ச்சல் வருவதை 80 சதவீதம் வரை தடுத்துவிட முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x