

தமிழகத்தின் கிராமப்புற மக்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கற்று கொடுக்கும் திட்டத்தை பிப்ரவரி 17-ம் தேதி தொடங்க தமிழ்நாடு ஐசிடி அகாடமி முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் ‘ டிஜிட்டல் தொழில் நுட்ப இந்தியா’ (Digital India) என்ற திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தும் வகையில் இத்திட்டம் நடை பெறவுள்ளது.
இது குறித்து சென்னையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஐசிடி அகாடமியின் தலைவர் லக்ஷ்மி நாராயணன் கூறியதாவது:
ஐசிடி அகாடமியின் வருடாந்திர கருத்தரங்கமான ’பிரிட்ஜ்’ வரும் 17-ம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ‘பெரிய டிஜிட்டல் உலகம்’ (The Big Digital World).
மத்திய அரசின் ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற திட்டத்தின்படி, 2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஒரு குடும் பத்தில் ஒரு நபராவது டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவு கொண்டவராக இருக்க வேண்டும். இந்த இலக்கை அடைய ஐசிடி அகாடமி தமிழகத்தில் உள்ள பொது சேவை மையங்கள் மற்றும் கல்லூரிகள் மூலமாக கிராமப் புற மக்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கு பயனுள்ள டிஜிட்டல் தொழில்நுட் பத்தை கற்றுத்தர முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பில் ஐசிடி அகாடமியின் கல்வி பிரிவுக்கான துணைத் தலைவர் பி.அன்புதம்பி கூறியதாவது:
அனைத்தும் டிஜிட்டல்மயமாகி வரும் காலக்கட்டத்தில் அந்த தொழில் நுட்ப அறிவு இல்லாமல் இருப்பது பாதகங்களை ஏற்படுத்தும். எழுத்தறிவு கொண்ட, ஆனால், டிஜிட்டல் தொழில் நுட்ப அறிவு இல்லாத மக்களுக்கு இத் திட்டம் பயன்படும். பிரிட்ஜ் கருத்தரங்கில் தமிழகத்திலிருந்து 250 பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகள் கலந்து கொள்கின்றனர். இதில் 90 சதவீதமான கல்லூரிகள் கிராமப்புறங்களில் உள்ளன. அவர்கள் தங்கள் கல்லூரி களில் வேலை பார்க்கும் துப்புரவு பணியாளர்கள், ஆய்வக உதவியாளர்கள் உட்பட 100 பேருக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் கற்றுக் கொடுப்போம் என்று உறுதி ஏற்றுக் கொள்வார்கள். இத்திட்டத்துக்கு தேவைப்படும் நிதி மற்றும் பிற ஆதாரங்களை சில மென்பொருள் நிறுவனங்கள் தர முன்வந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின் போது ஐசிடி அகாடமியின் தலைமை செயல் இயக் குநர் எம்.சிவகுமார் உடனிருந்தார். ஐசிடி அகாடமி மத்திய அரசு மற்றும் தமிழக அரசால் உருவாக்கப்பட்டது. தற்போது லாப நோக்கற்ற தனி அமைப்பாக செயல்பட்டு வருகிறது.