

உலகளவில் அழிந்துவரும் அரிய உயிரினங்களைப் பாதுகாக்கும் பொருட்டு சுவிட்சர்லாந்தில் 1948-ம் ஆண்டு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN) என்ற அமைப்பு நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தில் 140 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர் களும் உறுப்பினர்களாகப் பணி புரிகின்றனர்.
சிவப்புப் பட்டியலில் 15 உயிரினங்கள்
ஆண்டுதோறும் அழிந்துவரும் மற்றும் ஆபத்தில் உள்ள உயிரினங்களை சிவப்புப் பட்டியல் (Red List) என்ற பெயரில் ஐ.யு.சி.என். வெளியிட்டு வருகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த வரையாடு, சிங்கவால் குரங்கு, புனுகுப் பூனை, பிணந்தின்னிக் கழுகு, உள்ளான் பறவை, பாறை எலி, சிஸ்பாரா பல்லி, பாண்டிச்சேரி சுறா, அழுங்காமை, ஆனைமலை தவளை, தேரைத் தோல் தவளை, கிரெய்ட் புதர் தவளை, பொன்முடி புதர் தவளை, சுஷில் புதர் தவளை, ராமேசுவரம் ராட்சத சிலந்தி ஆகிய 15 உயிரினங்கள் இடம் பெற்றுள்ளன.
ராமேசுவரம் ராட்சத சிலந்தி
ராமேசுவரம் ஹனுமார் கோயில் அருகே உள்ள புளியமரங்களில் இந்த ராட்சத சிலந்தியை ஆண்ட்ரூ ஸ்மித் என்ற ஆய்வாளர் 2004-ம் ஆண்டு கண்டுபிடித்தார். அனுமர் கோயில் அருகே ஆண்ட்ரூ ஸ்மித் கண்டுபிடித்ததால் இருவரின் பெயரையும் இணைத்து பொயெசிலோதெரியா ஹனுமன்விலாசுமிகா (Poecilotheria hanumavilasumica) என்ற விலங்கியல் பெயர் இதற்கு சூட்டப்பட்டது.
ராமேசுவரம் பாராசூட் ஸ்பைடர் (Rameshwaram Parachute Spider) என்று ஆங்கிலத்தில் இந்த சிலந்தி அழைக்கப்படுகிறது. ராமேசுவரம் ராட்சத சிலந்தி சுமார் 8 அங்குல நீளம் கொண்டது. சிலந்தியின் கால்களில் மஞ்சள் நிறக் கோடுகள் காணப்படும்.
பொயெசிலோதெரியா ‘Poecilotheria’ எனப்படும் இந்த ராட்சத சிலந்தி தென்அமெரிக்கா காடுகளில் வாழும் உலகின் மிகப் பெரிய சிலந்தியான 'கோலியாத் பேர்ட் ஈட்டர்’ சிலந்தி வகைகளைச் சேர்ந்தது. இந்த சிலந்தியின் விஷத்தன்மை பாம்புகள், எலிகள், பூச்சி வகைகளை கொல்லக் கூடியது.
அழிவின் விளிம்பில்
இந்த ராட்சத சிலந்தி குறித்து ராமேசுவரம் தீவில் கணக்கெடுத்தபோது சுமார் 500-க்கும் குறைவான சிலந்திகள் மட்டுமே கண்டறிப்பட்டன.
இதைத் தொடர்ந்து ஐயுசிஎன் அமைப்பு 2008-ம் ஆண்டு சிகப்பு பட்டியலில் ராமேசுவரம் ராட்சத சிலந்தியையும் சேர்த்தது.
இது குறித்து ராமேசுவரத்தைச் சேர்ந்த காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் தாமோதரன் கூறியதாவது:
மனிதர்களுக்கு பாதிப்பில்லை
புளிய மரப் பொந்துகளில் காணப்படும் இந்த சிலந்தி பார்ப்பதற்கு மனிதமுகம் அளவுக்குப் பெரிதாக இருக்கும். அளவில் பெரிதாக இருப்பதால் மக்கள் அச்சத்தின் காரணமாக இதை அடித்துக் கொன்று விடுகிறார்கள். ஆனால் இதன் விஷம் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்காது. எனவே இந்த ராட்ச சிலந்தி குறித்து பொதுமக்கள் அச்சம் அடையத் தேவையில்லை.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ராட்சத சிலந்திகளை 500 டாலர் வரை விலை கொடுத்து வாங்கி மனிதர்கள் தங்களது செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகின்றனர்.
ராமேசுவரம் ராட்சத சிலந்தி மேலும் அழியாமல் இருக்க அறிவியல்பூர்வமான கள ஆய்வுகளை மத்திய மாநில அரசுகள் நடத்தி இதைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.