Last Updated : 20 Feb, 2015 10:17 AM

 

Published : 20 Feb 2015 10:17 AM
Last Updated : 20 Feb 2015 10:17 AM

கோணங்கள் 17 - தினசரி கல்யாண விருந்து!

சினிமா என்றதும் நடிகர்கள், வசூல், வெற்றி ஆகியவற்றைவிட, சுவாரசியமான விஷயம் சாப்பாடு. மென்பொருள் நிறுவனங்களில் நவீன கேண்டீன்களில் அது கிடைக்கும் என்றாலும், அதற்குரிய பணத்தை அவர்களின் சம்பளத்தில் பிடித்துக் கொண்டுதான் கொடுப்பார்கள். உலகிலேயே சாப்பாடும் போட்டு, சம்பளமும் கொடுக்கிற ஒரே இடம் சினிமாவாக மட்டுமே இருக்கும். பத்திரிகைகளில் ஆகட்டும், ஊடகமாகட்டும், எம்.ஜி.ஆர். தன்னுடன் நடிக்கும், வேலை பார்க்கும் அனைவருக்கும் தனக்குக் கிடைக்கும் சாப்பாடே கிடைக்க வேண்டும் என்று சொல்வாராம். அஜித் படப்பிடிப்பின்போது பிரியாணி செய்து போடுவார் என்பது சினிமா பக்கத்துக்கு எப்போதும் சூடான செய்தி.

காலையில் டீ, காபி, சிற்றுண்டி வகையில் இட்லி, தோசை, வடை, கோதுமை உப்புமா, ராகி, பூரி மசால், அல்லது சென்னா மசாலா, மூன்று வகை சட்னி, வடைகறி, இத்துடன் பழைய சோறு வெங்காயமும் கிடைக்கும். இதற்கெனத் தனிக் கூட்டம் ஒன்று உண்டு. இது துணை நடிகர்கள் உள்ளிட்ட பொதுப்பிரிவினருக்கு. தயாரிப்பாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர்களுக்குத் தனி.

உணவுக் குழு படப்பிடிப்புத் தளத்துக்குக் காலையில் வந்தவுடன் இளநீரில் ஆரம்பிப்பார்கள். குடிப்பதற்கு கேன் தண்ணீர். இட்லி கொஞ்சம் சின்னதாய், வெள்ளையாய், பூப்போல இருக்கும். சில சமயங்களில் காலையில் அசைவப் பிரியர்கள் கூட்டத்தில் இருந்தால் சிக்கன் குழம்போ, பாயாவோ நிச்சயம் வெளியிலிருந்து வாங்கி வைக்கப்படும்.

வெயில் காலமாயிருந்தால் மதிய உணவு இடைவேளைக்கு முன் பொதுப் பிரிவினருக்கு மோர், சிறப்புப் பிரிவினருக்குப் பழச்சாறு/ குளிர்பானம் தரப்படும், இது தவிர காபி டீ என்பது பட்டியலில் வராமல் எப்போதும் கிடைத்துக்கொண்டேயிருக்கும். மதியம் ஒரு மணிக்கு உணவு இடைவேளையென்றால் பதினோரு மணிக்கே தயாரிப்பாளர் தயாராகிவிடுவார்.

மெஸ்ஸிலிருந்து வாங்கி வந்த உணவுகளைப் பிரிப்பது என்பது ஒரு பெரிய வேலை. பொதுப் பிரிவினருக்கு அடுத்த நிலையில், இரண்டாவது உதவி இயக்குநர் மற்றும், மற்ற தொழில்நுட்ப உதவியாளர்களை மூன்றாம் நிலையில் வைப்பார்கள். இரண்டாம் நிலையில் முக்கியத் தொழில்நுட்பக் கலைஞர்கள் இருப்பார்கள்.

ஒரு பொரியல், கூட்டு, கலந்த சாதம், அப்பளம், சாம்பார், மோர்க் குழம்பு (அ) காரக்குழம்பு, ரசம், மோர் எனச் சைவ வகைகளும், உடன் ஒரு சிக்கன் குழம்பு அல்லது மீன் குழம்பும் பொதுப் பிரிவினருக்கு மதிய உணவாகக் கிடைக்கும். சமயங்களில் ஊறுகாய்க்குப் பதிலாக பீட்ரூட்டுடன் மிளகாயை வைத்து அரைத்துக் கொடுக்கப்படும் சட்னி அட்டகாசமாய் இருக்கும். இரண்டாம் நிலைப் பிரிவினருக்கு இதே அயிட்டங்களுடன் விருப்பத் தேர்வாக மேலும் ஒரு குழம்பு வேறு ஏதாவது பொறித்த அசைவ உணவு சேர்ந்திருக்கும்.

முதல் நிலையில் இருப்பவர்களுக்கு இரண்டு மூன்று அசைவ அயிட்டங்கள், சப்பாத்தி, தால், நல்ல சாதம், அப்பளத்துடன் கொஞ்சம் சிப்ஸ் எனப் பிரித்து வைப்பார்கள். இடங்களுக்கு ஏற்பப் பரிமாறும் முறையில் கொஞ்சம் கொஞ்சமாய் மரியாதையும், கூடும்.

மதிய சாப்பாடு முடிந்த மாத்திரத்தில் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு டீ, காபி களேபரங்கள் ஆரம்பமாகிவிடும். உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பது போல் கொஞ்சம் அதிகமாய்ச் சாப்பிட்டவர் களுக்கென்றே எலுமிச்சை டீ போட்டுத் தருவார்கள். அதை அருந்திய மாத்திரத்தில் நிச்சயமாய் தூக்கம் போய்விடுவது உறுதி. பிறகு படப்பிடிப்பு முடியும்போது ஒரு இனிப்பு, காரத்தோடு முடிப்பார்கள். அது சுவீட் பணியாரம், மசால் வடையாய் இருக்கலாம்.

அல்லது காராசேவுடன், உதிரி பூந்தியாகவும் இருக்கலாம். வழக்கமாய் மாலையோடு படப்பிடிப்பு முடிந்துவிடும். சமயங்களில் இரவு படப்பிடிப்பு தொடரும் போது இரவு உணவும் அதே போல வந்துவிடும். சப்பாத்தி, இட்லி, சட்னி, பரோட்டா, குருமா, சமயங்களில் இடியாப்பம், நான், சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல் என தகுதி வாரியாய்ப் பிரித்துக் கொடுப்பார்கள். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாய் தயிர் சாதம் நிச்சயம் உண்டு.

படப்பிடிப்பின் போது உணவு என்பது கல்யாண வீட்டின் பரபரப்பு போன்றது. தயாரிப்பாளர், பெரிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்குப் பரிமாறுதல் என்பது மாப்பிள்ளை வீட்டார் கவனிப்பு போல. கொஞ்சம் கூடக் குறைந்து இருந்தால் பஞ்சாயத்து ஆரம்பமாகிவிடும். இந்தப் பொறுப்பை வகிப்பவர்களை ‘புரொடொக்‌ஷன்’என்று அழைப்பார்கள். இவர்களது வேலை படக் குழுவில் இருப்பவர்களுக்கான உணவு மற்றும் தண்ணீரை அவர்கள் இருந்த இடத்திலேயே கொடுத்துப் பரிமாறுவது மட்டுமே. ஒரு சாப்பாட்டுக்குக் குறைந்தபட்சம் 125 ரூபாயிலிருந்து 250 ரூபாய்வரைகூட ஆகும்.

படப்பிடிப்புக்கு என்றே சமையல் செய்து கொடுக்கும் மெஸ்கள் சாலிகிராமம் முழுவதும் நிறைய உள்ளன. காரக்குழம்பை வைத்துப் பார்த்தாலே சொல்லிவிடலாம் யார் மெஸ்ஸிலிருந்து சாப்பாடு வந்திருக்கிறது என்று. பெரும்பாலும் ஒவ்வொரு படத்துக்கும் புரொடக்‌ஷன் பார்ப்பவர்களுக்கும் மெஸ்களுக்கு இடையே ஓர் ஒப்பந்தம் இருக்கும். இவர்கள் தரும் உணவைத் தவிர, சைடு டிஷ்ஷாக சிக்கன், மட்டன், டிபன் வகையறாக்களை ஓட்டலிருந்தும் வாங்கி வரச் சொல்லுவார்கள்.

உதாரணமாகப் பிரபல அசைவ உணவகங்களிலிருந்து விதவிதமாய் உணவு வாங்கி வரச் சொல்லி எல்லாவற்றிலும் செல்லமாய் ஒரு கடி கடித்துச் சாப்பிடும் ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். நடிகர் பிரபு படப்பிடிப்பில் இருந்தால் அவரது வீட்டிலிருந்து உணவு சமைத்து வந்துவிடுமாம். அதுவும் ஊர்வன, பறப்பன, என வகை வகையாய். சாப்பிட்டவர்கள் சொல்லக் கேட்டால் நாக்கில் நீர் ஊறும்.

இப்படி வகை வகையாகச் சாப்பாடு போட்டால் நல்லாத்தானே இருக்கும் என்று நினைக்கிறவர்களுக்கு ஒரு விஷயம். மெஸ்களின் கைமணத்தில் என்னதான் விதவிதமான உணவுகளை மாறி மாறிப் போட்டாலும், சினிமா சாப்பாடு என்பது ஒரே மாதிரி இருக்கும், மெஸ்களின் பெயர்கள் மட்டுமே வேறு வேறு என நொந்து நூடுல்ஸ் ஆகி, “அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” என்று நாற்பது நாள் படப்பிடிப்பில் ஐந்தாவது நாளே சொல்லாதவர்கள் மிகச் சொற்பமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x