Published : 21 Feb 2015 09:15 PM
Last Updated : 21 Feb 2015 09:15 PM

தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன: திமுக தலைவர் கருணாநிதி குற்றச்சாட்டு

தமிழகத்தில் 2013-ம் ஆண்டைவிட 2014-ம் ஆண்டில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக தமிழக ஆளுநர் சட்டப்பேரவையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஸ்டாலின் கொலை செய்யப்பட்டது, கன்னியாகுமரி மாவட்டத்தில் 19 வயது கல்லூரி மாணவி கடத்தப்பட்டது போன்ற குற்றச்சம்பவங்கள் குறித்து ஏராளமான செய்திகள் சில நாட்களாக வந்துகொண்டுள்ளன.

அதிமுக ஆட்சிக்கு வந்த 44 மாதங்களில் 7,805 படுகொலைகளும், 79,305 கொள்ளைச் சம்பவங்களும், 4,697 கற்பழிப்பு சம்பவங்களும் நடந்துள்ளதாக குற்ற ஆவணக்காப்பகத்தின் தகவல்கள் கூறுகின்றன. இதில் கடந்த ஆண்டு மட்டுமே சொத்து சார்ந்து 1,489 குற்றங்கள் நடந்துள்ளன.இதில் சென்னை முதலிடத்தில் உள்ளது. பெண்களுக்கு எதிராக கடந்த ஆண்டில் 6,286 குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழகத்தில் 2013-ம் ஆண்டைவிட 2014-ம் ஆண்டில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதும் பெரியளவில் குறைந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறையை முதல்வர் பாராட்டி பேசினார். ஆனால், ராமநாதபுரத்தில் நீதிபதி வீட்டின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் நீதிபதி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எம்.வேலுமணி ஆகியோர், “இந்த விரும்பத்தகாத நிகழ்வை ராமநாதபுரம் போலீசாரோ, உளவுப் பிரிவினரோ முன்கூட்டியே அறிந்திருக்க முடியாமல் போனது ஏன்? நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லையென்றால், சாதாரண மக்களின் நிலையை கற்பனை செய்துகூடப் பார்க்க முடிய வில்லை. குற்றவாளிகள் மீது போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபற்றிய விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும்” என்று தீர்ப்பளித்துள்ளனர். இது அதிமுக அரசுக்கு நீதித்துறை வழங்கிய பாராட்டா இல்லை அல்லது இடித்துரையா?

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x