

வருமான வரி வழக்கு விசாரணையை முடிக்க எழும்பூரில் உள்ள விசாரணை நீதிமன்றத்துக்கு மேலும் 4 மாத காலம் நீட்டிப்பு தர வேண்டும் என ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு மீது ஏப்ரல் 15-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடக்க உள்ளது.
இதற்கான உத்தரவை நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், விக்ரம்ஜித் சென் ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்தது. முன்னதாக, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார்த் லூத்ரா, விசாரணையை முடிக்க கூடுதல் காலநீட்டிப்பு தர வேண்டாம் என ஆட்சேபம் தெரிவித்தார்.
கடந்த 1991-92 மற்றும் 1992-93 ஆகிய நிதியாண்டுகளில் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை என கூறி அதன் பங்குதாரர்களான ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். கடந்த ஜனவரி மாதத்தில் அந்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், வருமான வரி கணக்கு தொடர்பான இந்த வழக்கின் விசாரணையை 4 மாத காலத்துக்குள் சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்றம் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் சசி எண்டர்பிரைசஸ் தரப்பில் தாக்கல் செய்துள்ள இப்போதைய மனுவில் தெரிவித்துள்ள விவரம்:
வழக்கு தொடர்பான ஆவணங்கள் விசாரணை நீதிமன்றத்துக்கு மார்ச் 13-ம் தேதி போய்ச் சேர்ந்தது. தமிழகத்தில் ஆளும் கட்சியின் பொது செயலராக ஜெயலலிதா இருந்து வருகிறார். பொதுத்தேர்தலுக்கான அட்டவணை மார்ச் 5-ம் தேதி அறிவிக்கப்பட்டது. வழக்கு ஆவணங்கள் விசாரணை நீதிமன்றத்துக்கு போய்ச் சேரும் முன்பே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 24-ல் நடக்கிறது. மாநிலத்தில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் ஆளும் கட்சி போட்டியிடுகிறது. மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் ஈடுபடுவதால் நேரில் ஆஜராகி வாக்கு மூலத்தை பதிவு செய்ய இயலாத நிலையில் இருக்கிறார்.
எனவே வழக்கு விசாரணையை முடிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 4 மாத காலம் நீட்டிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.