

தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நேற்று வாபஸ் பெற்றனர். அதே நேரத்தில் லாரி வாடகை பிரச்சினை குறித்து இன்றும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கிறது.
எண்ணெய் நிறுவனங்களுடன் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகை கட்டணத்தை புதுப்பிக்கும் ஒப்பந்தத்தை எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதியுடன் முடிந்துவிட்டது.
இதையடுத்து, வாடகையை உயர்த்தக்கோரி, தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தீர்வு ஏற்படாததால் கடந்த 31-ம் தேதி நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மொத்தமுள்ள 3,200 டேங்கர் லாரிகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், காஸ் சிலிண்டர் விநியோகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டது.
முத்தரப்பு பேச்சு
இந்நிலையில், வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சென்னையில் நேற்று மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் பங்கேற்பதற்காக, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பொது மேலாளர் மாலிக், இந்துஸ்தான் பெட்ரோ லியம் நிறுவன துணைப் பொதுமேலாளர் நந்தி, இந்தியன் ஆயில் நிறுவன பொதுமேலாளர் லம்பா ஆகியோர் மும்பையில் இருந்து வந்திருந்தனர். அவர்களுடன் தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நடராஜன், செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட 18 பேர் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தை காலை 11 மணிக்கு தொடங்கியது. டேங்கர் லாரிகளுக்கான வாடகையை 1 கி.மீ.க்கு ரூ.3.09 காசுகளாக நிர்ணயம் செய்ய வேண்டும் என உரிமையாளர்கள் வலியுறுத்தினர். பின்னர் அதை ரூ.3.06 காசுகளாக குறைத்துக்கொள்ள முன்வந்தனர்.
வாடகை நிர்ணயம்
எண்ணை நிறுவனங்களோ ரூ.2.94 ஆக நிர்ணயம் செய்வதாக தெரிவித்தன. பிற மாநிலங்களில் லாரி வாடகை மிகக் குறைவாக உள்ளதால், மேற்கொண்டு லாரி வாடகையை உயர்த்தித் தரமுடியாது என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டு மாலை 6 மணி வரை நீடித்தது.
பின்னர் நிருபர்களிடம் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நடராஜன், செயலாளர் கார்த்திக் ஆகியோர் கூறியதாவது:
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறும்படி தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்டோம். பொதுமக்களின் நலன் கருதி வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற தீர்மானித்துள்ளோம். இது உடனடியாக அமலுக்கு வருகிறது.
பேச்சுவார்த்தையில் வாடகை குறித்து முடிவு ஏற்படவில்லை. எனினும், பிற விஷயங்கள் குறித்து பேசினோம். பேச்சுவார்த்தை சுமுகமாக அமைந்தது. வாடகை குறித்து நாளை (இன்று) எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். நாளை மாலைக்குள் தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.