

உடலில் தானாக தீக்காயங்கள் ஏற்படும் குழந்தையின் காயங்கள் குணமானதாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் டீன் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த நெடிமோழியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணா (26). இவரது மனைவி ராஜேஸ்வரி (24). இவர்களின் இரண்டாவது குழந்தை ராகுல். இக்குழந்தை பிறந்த இரண்டரை மாதத்தில் அதன் உடலில் தானாக தீக்காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அந்த குழந்தைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து குணப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ராஜேஸ்வரிக்கு கடந்த மாதம் 9-ம் தேதி மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த சில நாட்களில், அதன் உள்ளங்கால்களில் தானாகவே தீக்காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அந்த குழந்தை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டது. பச்சிளம் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதன் மூலம் குழந்தையின் உள்ளங் கால்களில் இருந்த காயங்கள் குணமாகியுள்ளன.
இதுதொடர்பாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன், டாக்டர் ஆர்.நாராயணபாபு கூறியதாவது:
கருணாவின் இரண்டாவது குழந்தைக்கு செய்தது போலவே, இந்த குழந்தைக்கும் 37 பரிசோதனைகள் செய்யப் பட்டுள்ளன. குழந்தை நன்றாக இருப்பதாக பரிசோதனையின் முடிவுகள் வந்துள்ளன. குழந் தையின் பெற்றோருக்கு மட்டும் மனநலம் தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைக்கு காயங்கள் அனைத்தும் குணமாகிவிட்டது. குழந்தையை டிஸ்சார்ஜ் செய்வது பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள்தான் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.