Published : 01 Feb 2015 09:42 AM
Last Updated : 01 Feb 2015 09:42 AM

ஓ.பன்னீர்செல்வத்தின் 125 நாள் ஆட்சி எப்படி? - புதிய திட்டங்கள் எதுவும் இல்லை; மக்களுக்கு எந்த நலனும் ஏற்படவில்லை - கட்சிகள் கருத்து

செப்டம்பர் 27.. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்து பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பளித்ததும் தமிழக அரசியல் பரபரப்பானது. ஒரு பக்கம் தீர்ப்புக்கெதிராக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டிருக்க, மறுபக்கம், புதிய அரசு அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. எதிர்பார்க்கப்பட்டபடியே, நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு, செப்டம்பர் 29-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் தலைமையில் ஆட்சி அமைந்து இன்றுடன் (பிப்ரவரி-1) 125 நாட்கள் ஆகிறது. ஜெயலலிதா தலைமையில் நடந்த ஆட்சிக்கும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்து வரும் ஆட்சிக்கு என்ன வித்தியாசம்? அரசு நிர்வாகத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதா?

ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப் பேற்றதும் தலைமைச் செயலகத்தில் தன் அன்றாட பணிகளில் கவனம் செலுத்தினார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப் பட்டபோது, அக்டோபர் 1-ம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதி தனது பணியைத் தொடங்கினார்.

ஆனாலும் ஒரு மாதத்துக்குப் பிறகே அதிமுக வினரின் போராட்டங்கள் ஓய்ந்து, சகஜ நிலைக்கு தமிழகம் திரும்பியது. அமைச்சர்கள் தலைமைச் செயலகத்துக்கு வரத் தொடங்கினர். துறை வாரியான ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.

பால், மின் கட்டண உயர்வு

அக்டோபர் 25-ம் தேதி பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டது. டிசம்பர் 12 முதல் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கியது. ஆனால், வெறும் 3 நாட்களில் கூட்டத்தை முடித்து, பிரச்சினைகளை சமாளித்தார் முதல்வர்.

சுதந்திரமான முடிவுகள்

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அரசுத்துறைகள் எப்படி செயல்பட்டு வந்ததோ, அந்த நிலைதான் இப்போதும் தொடர்கிறது. அரசு திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள், ஆய்வுக் கூட்டங்களை அமைச்சர்கள் சுதந்திரமாக நடத்தி முடிவுகளை எடுக்கின்றனர் என்பது தலைமைச் செயலக வட்டாரங்கள் தரும் தகவல்.

8 மணி நேர பணி

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத் தவரை, அவர் ஏற்கெனவே நிதியமைச்சராக பணியாற்றிய அறையிலேயே தற்போதும் அலுவல் களை கவனிக்கிறார். தினமும் சுமார் 8 மணி நேரத்துக்குமேல் தலைமைச் செயலகத்தில் இருந்து, அலுவல்களை மேற்கொள்கிறார். தலைமைச் செயலர், உள்துறை முதன்மைச் செயலர், அரசு ஆலோசகர்கள் மற்றும் துறை அதிகாரிகள் அன்றாட அலுவல் தொடர்பாக முதல்வரை சந்தித்துப் பேசுகின்றனர். பின்னர் கோப்புகளைப் பார்க்கிறார். அமைச்சர்களும் முதல்வரை தனித்தனியாக சந்திக்கின்றனர். முக்கியப் பிரச்சினைகளில் முடிவெடுப்பது குறித்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனைகளும் போயஸ் தோட்டத்தில் இருந்து முதல்வர் அலுவலகத்துக்கு பெறப்படுவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

காலையில் தலைமைச் செயலகத்துக்கு வரும் முதல்வர், மாலை 5 அல்லது 6 மணிக்குதான் வீட்டுக்கு செல்கிறார். முதல்வரின் வாகனத்துக்கு முன்னும், பின்னும் 2 பாதுகாப்பு வாகனங்கள் மட்டுமே கான்வாயில் செல்கின்றன. வழிநெடுகிலும் போலீஸார் நிறுத்தப்படுவதில்லை.

கெடுபிடி இல்லை

பொதுவாக தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, பாதுகாப்பில் இருந்த அதிகப்படியான கெடுபிடி நிலை தற்போது இல்லை. பல்வேறு பிரச்சினைகளுக்காக தலைமைச் செயலகத்துக்கு மக்கள் மனு அளிக்க வருவது தொடர்கிறது.

முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்று 125 நாட்களை எட்டியுள்ள நிலையில், இதுவரை ஒருநாள்கூட அவர் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. அமைச்சர்கள், அதிகாரிகள்கூட பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்து வருகின்றனர்.

ரிலாக்ஸ் போலீஸ்

ஓ.பன்னீர்செல்வம் அரசின் 125 நாள் செயல்பாடுகள் குறித்து காவல் துறை உயர் அதிகாரிகள் 5 பேரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் முதலில் மறுத்த அவர்கள், பின்னர் பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் பேச ஆரம்பித்தனர்.

வழக்கமாக பணிகளை மட்டுமே செய்து வருகிறோம். பன்னீர்செல்வம் முதல்வராக வந்த பின்னர் எந்த ஒரு மாறுதலும் காவல் துறையில் செய்யப்படவில்லை. எங்களுக்கு கிடைக்கும் தகவல்களை 3 இடங்களில் தினமும் கூற வேண்டி யுள்ளது. அதிகாரிகள் பலர் இப்போது சீருடை அணியாமல் சாதாரண ஆடைகளில் அலுவலகம் வரத் தொடங்கியுள்ளனர். போலீஸாருக்கு இது ஓய்வுகாலம் என்பதுபோல பலர் செயல்படுகின்றனர். மொத்தத்தில் பல போலீஸ் அதிகாரிகள் சுதந்திரமாக சொந்தப் பணிகளை மட்டுமே எப்போதும் செய்கின்றனர் என்றனர்.

ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக வந்த பின்னர் குற்றங்கள் அதிகரித்திருக்கிறதா? என்ற கேள்விக்கு ‘குற்றங்கள் அதிகரிக்கவும் இல்லை; குறையவும் இல்லை’ என்றே அனைத்து அதிகாரிகளும் பதில் கூறினர்.

இப்போதும் ‘அண்ணன்’தான்

ஓ.பன்னீர்செல்வம் முன்பு வாரம் ஒரு முறை, மாதம் 2 முறை கண்டிப்பாக தொகுதிக்கு வருவார். முதல்வரான பின் இரு முறை மட்டுமே தொகுதிக்கு வந்துள்ளார். தனது பெயரில் போஸ்டர் ஒட்டுவதோ, பேனர் வைப்பதோ கூடாது. தொகுதிக்கு வரும்போது வரவேற்பு அளிப்பது, கூட்டம் சேர்ப்பது இருக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார். தன்னை முதல்வர் என்று அழைக்க கூடாது என்று கண்டிப்புடன் கூறியுள்ளார். அதனால் அவரை வழக்கம்போல அண்ணன் என்றே அழைக்கிறோம் என்கின்றனர் போடி தொகுதி அதிமுகவினர்.

எப்படி செயல்படுகிறது எம்எல்ஏ அலுவலகம்?

முதல்வர் தொகுதிக்கான சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தென்றல் நகரில் உள்ளது. இதை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்துவதில்லை. நீண்ட நாட்களாக பூட்டிக் கிடப்பதால் வளாகம் முழு வதும் புதர்கள், செடி கொடிகள் மண்டி காணப் படுகிறது.

இதற்கு பதிலாக, போடி சுப்புராஜ் நகரிலுள்ள 2 மாடி கட்டிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை அமைத்துள்ளார். அங்குள்ள பெயர் பலகையில், ‘ஓ.பன்னீர்செல்வம், நிதி மற்றும் திட்டத் துறை அமைச்சர்’ என்றே தமிழ், ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொகுதி வளர்ச்சி பெறுகிறதா?

ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானதால் தங்கள் தொகுதி நட்சத்திர அந்தஸ்துடன் அதிக வளர்ச்சியைப் பெறும் என போடி தொகுதி மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், 125 நாட்கள் ஆகியும் போடி தொகுதிக்கென ஒரு புதிய திட்டம்கூட அரசால் அதிகாரப்பூர்வமாக கொண்டுவரப்படாதது அவர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அதேநேரத்தில், தொகுதியில் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வந்த திட்டப் பணிகள், தற்போது முன்பைவிட வேகமெடுத்துள்ளன.

இதுபற்றி தொகுதி மக்கள் கூறும்போது, ‘‘பன்னீர் செல்வம் அமைச்சராக இருந்தாலே இவற்றையெல்லாம் செய்துவிடுவார். முதல்வரிடம் நாங்கள் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

தொகுப்பு: (ஹெச்.ஷேக் மைதீன், முரளிதரன், செல்வகுமார், சிவா, மணிகண்டன், கண்ணன், சாரதா, அ.வேலுச்சாமி, ஆர்.செளந்தர்)

எதிர்க்கட்சிகள் என்ன சொல்கின்றன?

மு.க.ஸ்டாலின் (திமுக):

பன்னீர்செல்வம், முதலில் தன்னை முதல்வர் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளட்டும். முதல்வருக்கான அறையிலேயே அவர் அமரவில்லை. அலுவலகம் மட்டுமன்றி அவரது வீட்டிலும் பெயர்ப்பலகை மாற்றப்படவில்லை. இது தமிழக மக்களுக்கு ஏற்பட்ட அவமானமாகவே கருதுகிறோம். புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்கவில்லை. மொத்தத்தில் மக்களுக்கு எந்த நலனும் ஏற்படவில்லை.

தமிழிசை சவுந்தரராஜன் (பாஜக):

பன்னீர்செல்வம் முதல்வரான நாளிலிருந்து இன்று வரை தமிழகத்தில் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. பன்னீர்செல்வம் தன்னை முதல்வராக சொல்லிக் கொள்ளவே தயங்குகிறார். புதிய திட்டங்களை அறிவிக்கவே பயப்படுகின்றனர். 125 நாட்கள் மட்டுமல்ல இன்னும் ஒரு வருடம் கழித்து கேட்டாலும் இதைத்தான் சொல்வேன்.

ராமதாஸ் (பாமக):

ஜல்லிக்கட்டு உரிமையை பறிகொடுத்தது, கரும்புக்கு மாநில அரசின் பரிந்துரை விலையை குறைத்தது, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தாதது, பால் விலை, ரூ.5,447 கோடிக்கு மின் கட்டணத்தை உயர்த்தியது, பருப்பு மற்றும் முட்டை கொள்முதலில் ஊழல் இவை எல்லாம் இந்த ஆட்சியின் அவலங்கள். ஓ.பன்னீர் செல்வத்தை பாராட்ட காரணம் தேடினால் எதுவுமே கிடைக்கவில்லை. மொத்தத்தில் இந்த 125 நாள் ஆட்சி அவலங்களின் உச்சம்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்):

ஒருவரை பாராட்டவோ விமர்சிக்கவோ வேண்டுமென்றால் அந்த நபர் எதையாவது செய்திருக்க வேண்டும். ஆனால் முதல்வர் பன்னீர்செல்வம் எதையுமே செய்யவில்லையே. பால் விலை, மின் கட்டணம்தான் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த 125 நாட்களில் எதுவுமே நடக்கவில்லை.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்)

ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைந்திருக்கும் மாநில அரசு செயல்படாத அரசாக உள்ளது. அவர் அதிகாரம் இல்லாத முதல்வராக செயல்பட்டு வருகிறார். பாக்ஸ்கான் தொழிலாளர்கள் பிரச்சினை, சட்டம் ஒழுங்கு பிரச்சினை உட்பட பல பிரச்சினைகள் குறித்து அரசு கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசின் நடவடிக்கைகளால், தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும்போதும், மாநில அரசு செயல்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x