Published : 19 Feb 2015 08:33 AM
Last Updated : 19 Feb 2015 08:33 AM

நீலகிரியில் பெண்ணைக் கொன்று மக்களை அச்சுறுத்திய புலி சுட்டுக் கொல்லப்பட்டது: 5 நாட்கள் வேட்டை முடிவுக்கு வந்தது; மக்கள் நிம்மதி

நீலகிரியில் கடந்த ஐந்து நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த மனித வேட்டைப் புலியை பெரும்பள்ளியில் அதிரடிப் படையினர் நேற்று மாலை சுட்டுக்கொன்றனர்.

நீலகிரி மாவட்டம், பாட்டவயல் பகுதியில் கடந்த 14-ம் தேதி தேயிலைத் தோட்டத்தில் பணி புரிந்த மகாலட்சுமி(30) என்ற பெண்ணை புலி கடித்துக் கொன்றது. அன்றைய தினம் மாலையில், ரெஜீஸ் என்ற இளைஞரையும் அதே புலி தாக்கியது.

மனித வேட்டைப் புலியை பிடிக்க வனத்துறை, அதிரடிப்படையினர் மற்றும் ஆயுதப் பிரிவு போலீஸார் அடங்கிய ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரமாக நடந்தது. புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க பாலப்பள்ளி பகுதியில் 10 கேமராக்கள் மற்றும் ஐந்து கூண்டுகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், நேற்று மாலை 3.30 மணியளவில் பாலப்பள்ளி பெரும்பள்ளி ராஜன் எஸ்டேட்டில் ஆடு ஒன்றை புலி துரத்தும் தகவலை அறிந்த அதிரடிப்படையினர் புலியைச் சுற்றி வளைத்து சுட்டதில் புலி இறந்தது.

வாகனத்தில் ஊர்வலமாக…

சுட்டுக் கொல்லப்பட்ட புலியை வனத்துறையினர் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, கூடலூருக்கு வந்தனர். சுட்டுக் கொல்லப்பட்ட புலியை கண்டதும் மக்கள் ஆரவாரம் செய்தனர். கால்நடை மருத்துவர்கள் மனோகரன் மற்றும் விஜயராகவன் ஆகியோர் பிரேதப் பரிசோதனை செய்தனர். பின்னர், அப்பகுதியில் புலி எரியூட்டப்பட்டது.

138 செ.மீ. நீள புலி

கோவை மண்டல வனப் பாதுகாவலர் அன்வருதீன் கூறியது: இறந்தது ஆண் புலி, சுமார் 8 முதல் 10 வயதிருக்கும். அதன் உயரம் 101 செ.மீ., நீளம் 138 செ.மீ., வால் 106 செ.மீட்டர் இருந்தது. முதுகில் ஏற்பட்ட காயத்தால் வேட்டையாட முடியாமல் மனித வேட்டை புலியாக மாறியிருக்கலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x