Published : 07 Feb 2015 12:55 PM
Last Updated : 07 Feb 2015 12:55 PM

மோடியின் அபாயகரமான மவுனம்- சரமாரியாக சாடும் நியூயார்க் டைம்ஸ்

இந்திய குடியரசு விழாவுக்கு முதல் முறையாக வருகை தந்து கவுரவித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, போகும்போது சும்மா போகவில்லை. 'மதச்சார்புகளால் பிரிந்துகிடக்க வாய்ப்பு கொடுக்காத வரையில், இந்தியாவின் வெற்றி நீளும்' எனச் சொல்லிவிட்டுச் சென்றார்.

இந்தியாவின் மத சகிப்புத்தன்மை குறைந்து வருகிறதா என பல்வேறு தரப்பிலும் சந்தேகம் எழுந்த நிலையில்தான் ஒபாமா இவ்வாறு கூறிச் சென்றார்.

ஒபாமாவின் கருத்து இன்னமும் விவாதப் பொருளாக இருக்கும் அதேவேளையில், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தனது தலையங்கத்தில் மோடியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது. அதில், தேசத்தில் நடைபெறும் மதவாத சம்பவங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து கடைபிடிக்கும் மவுனம் மிகவும் அபாயகரமானது என விமர்சிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தலையங்கக் கட்டுரையில், தேவாலயங்கள் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், கடந்த மார்ச் மாதம் அயோத்தியாவில் விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளால் அரங்கேற்றப்பட்ட 'கர் வாப்ஸி', அதாவது மறு மதமாற்ற நிகழ்ச்சி ஆகியன விமர்சிக்கப்பட்டுள்ளன. மறு மதமாற்ற நிகழ்ச்சிகள் மூலம், இத்தகைய மதவாத அமைப்புகள் நெருப்புடன் விளையாடுவதாகவும் கட்டுரையில் வலுவான எச்சரிக்கை உள்ளது.

நியூயார்க் டைம்ஸ் தலையங்கத்தின் சாராம்சம் இதுவே: "இந்தியாவில் நடைபெறும் மதவாத நிகழ்வுகளைக் கண்டும் காணாமல் திருவாளர். மோடி கடைபிடித்துவரும் மவுனமானது, இரண்டு முடிவுகளுக்கு நம்மைத் தள்ளுகிறது. ஒன்று, மோடியால் இந்துத்துவா அமைப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் இருக்க வேண்டும்; இல்லையேல் அவ்வாறு கட்டுப்படுத்த மோடி விரும்பாமல் இருக்க வேண்டும்" என்பனவே அவை.

பிப்ரவரி 6, 2015 தேதியிட்ட நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான தலையங்கம் - முழு வடிவம்:

இந்திய தேசத்தின் சிறுபான்மையினருக்கு எதிராக நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கும் வன்முறைகளுக்கு எதிராக கருத்து தெரிவிக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு என்ன சிரமம் இருந்துவிட முடியும்? கிறிஸ்தவர்கள் வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல் நடத்தப்படுகிறது... ஆனால் இந்தியர்கள் அனைவரையும் போற்றி பாதுகாக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரோ அவ்விவகாரத்திற்கு எவ்வித எதிர்வினையும் காட்டவில்லை.

சரி இதற்குத்தான் பதில் இல்லை என்று பார்த்தால், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் கட்டாயப்படுத்தப்பட்டோ, பணம் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டோ கொத்து கொத்தாக மறு மதமாற்றம் செய்யப்பபடுகின்றனர். அதற்கும் மவுனமே பதிலாக இருக்கிறது.

இந்தியாவில் நடைபெறும் மதவாத நிகழ்வுகளைக் கண்டும் காணாமல் திருவாளர் மோடி கடைபிடித்துவரும் மவுனமானது, இரண்டு முடிவுகளுக்கு நம்மைத் தள்ளுகிறது. ஒன்று, மோடியால் இந்துத்துவா அமைப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் இருக்க வேண்டும்; இல்லையேல், அவ்வாறு கட்டுப்படுத்த மோடி விரும்பாமல் இருக்க வேண்டும்.

சமீபகாலமாக இந்தியாவில் உள்ள தேவாலயங்கள் சூறையாடப்படுவதும், தீக்கிரையாக்கப்படுவதும் அதிகமாக நடைபெறுகிறது. கடந்த டிசம்பர் மாதம், கிழக்கு டெல்லியில் உள்ள புனித செபாஸ்டின் தேவாலயம் ஒன்று தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. அந்த தேவாலயத்தின் பாதிரியார் அளித்த புகாரில் மண்ணெண்ணெய் ஊற்றி ஆலயம் எரிக்கப்பட்டதாக கூறியிருந்தார். திங்கள்கிழமை, (பிப்ரவரி 3-ம் தேதி) புதுடெல்லியில் உள்ள புனித அல்போன்ஸா தேவாலயம் சூறையாடப்பட்டுள்ளது. அதில் விந்தை என்னவென்றால், பிரார்த்தனைக்குப் பயன்படுத்தப்படும் புனித பாத்திரங்களை சேதப்படுத்திய விஷமிகள் அங்கிருந்த காணிக்கைப் பெட்டியில் நிரம்பி வழிந்த பணத்தை சட்டை செய்யவில்லை.

இந்தத் தாக்குதல்களையடுத்து, கத்தோலிக்க பிஷப்புகள் மாநாட்டு சபையானது இந்திய அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய தேசத்தின் மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்கும்படியும், இங்குள்ள கிறிஸ்தவர்கள் மனங்களில் பாதுகாப்புணர்வை உறுதி செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேவாலய தாக்குதல்களுக்கு நிகராகவே மறு மதமாற்ற நிகழ்வுகளும் கவனிக்கப்பட வேண்டியவை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆக்ரா நகரில் 200 முஸ்லிம்கள், இந்து மதத்துக்கு மாற்றப்பட்டனர். ஜனவரி மாதம், மேற்குவங்கத்தில் 100 கிறிஸ்தவர்கள், இந்து மதத்துக்கு மாற்றப்பட்டனர். இந்து மதத்தின் அடிப்படைவாத அமைப்புகளான விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) ராஷ்டிரிய சுவயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) ஆகிய அமைப்புகள் மறு மதமாற்ற நிகழ்வுகளுக்கு பகிரங்கமாகவே ஆதரவு தெரிவிக்கின்றன.

வி.ஹெச்.பி தலைவர் பிரவீண் தொகாடியா கூறுகையில், "இந்தியாவில் 80% மக்கள் இந்துக்கள். எங்கள் அமைப்பின் தற்போதைய இலக்கு, இந்த தேசத்தை 100% இந்து தேசமாக மாற்ற வேண்டும் என்பதே. இதை அடைய ஒரே வழி, சிறுபான்மையினருக்கு அவர்களுடைய மத நம்பிக்கை உரிமையை வழங்காமல் இருப்பதே ஆகும்" என கூறியுள்ளார்.

இத்தகையச் சூழலில், இம்மாதம் அயோத்தியாவில் 3000 முஸ்லிம்களை, இந்து மதத்துக்கு மாற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, நாடு முழுவதும் மூண்ட இந்து - முஸ்லிம் மோதலில் 2000-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இப்போது, விஷ்வ ஹிந்து பரிஷத் மீண்டும் நெருப்புடன் விளையாடுகிறது.

திருவாளர் மோடி, இந்தியாவின் வளர்ச்சிக்கு பல நம்பிக்கைக்குரிய திட்டங்களை முன்வைத்துள்ளார். ஆனால், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பார்வையில் இந்தியாவின் எதிர்காலம் குறித்த கணிப்பு "மதச்சார்புகளால் பிரிந்துகிடக்க வாய்ப்பு கொடுக்காத வரையில் இந்தியாவின் வெற்றி நீளும்" என்பதாக இருக்கிறது.

இத்தகையச் சூழலில், மத சகிப்புத்தன்மை தேய்ந்து வருவது குறித்து திரு.மோடி தனது செவியை கூராக்கி, மவுனத்தை கலைக்க வேண்டும்."

தமிழில்:பாரதி ஆனந்த்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x