

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ள வெற்றி இந்தியாவில் மத சார்பின்மைக்கு இருக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, "டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது. இத்தகைய பிரம்மாண்ட வெற்றியை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இந்த வெற்றி உணர்த்தும் ஒரு மிகப்பெரிய விஷயம், மத சார்பின்மைக்கு மக்கள் அளிக்கும் முக்கியத்துவம். அதேவேளையில், இத்தேர்தல் முடிவை பிரதமர் மோடி மீதான பொது வாக்கெடுப்பாக எடுத்துக்கொள்ளலாமா என கேட்டால் அதை இப்போதே முடிவு செய்துவிட முடியாது" என்றார்.
டெல்லி தேர்தலில், 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாஜக 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் இத்தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளது.