Last Updated : 02 Feb, 2015 10:21 AM

 

Published : 02 Feb 2015 10:21 AM
Last Updated : 02 Feb 2015 10:21 AM

குறிஞ்சிப்பாடி லுங்கிகளுக்கு ஸ்பெயினில் வரவேற்பு: கோ-ஆப்டெக்ஸுக்கு ஆண்டுக்கு ரூ.4 கோடி வரை வருமானம்

தமிழகத்தில் தயாராகும் கைத்தறி லுங்கிகள், ஸ்பெயின் நாட்டில் சட்டை, லேப்-டாப் பை, ‘டை’ என உருமாறி, அமோகமாக விற்பனையாகி வருகின்றன.

தமிழக அரசு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ், தமிழகத்தில் 130 இடங்கள், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் என மொத்தம் 200 இடங்களில் கைத்தறி ஆடை விற்பனையை மேற் கொண்டுவருகிறது. இந்தியாவில் அரசு நிறுவனங்களின் கைத்தறி ஆடை விற்பனையில் கோ-ஆப்டெக்ஸ் 49 சதவீதத்தை பெற்றிருக்கிறது. வெளிநாட்டு சந்தையிலும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்க தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. சர்வதேச கண்காட்சிகளில் ஸ்டால்களை அமைத்து தனது தயாரிப்புகளை கோ-ஆப்டெக்ஸ் பிரபலப்படுத்திவருகிறது.

இதன் பயனாக, ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் ஒருவர் கோ-ஆப்டெக்ஸ் ஆடைகளை வாங்கி, அதனை தலைநகர் மேட்ரிட் மற்றும் இதர ஐரோப்பிய நகரங்களில் வெற்றிகரமாக விற்பனை செய்துவருகிறார்.

இது குறித்து கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநர் டி.என். வெங்கடேஷ் கூறியதாவது:

கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி ஆடைகளுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு அதிகரித்துவருகிறது. சமீபத்தில் ஜெர்மனி நாட்டில் பிராங்க்பர்ட் நகரில் 170 நாடுகள் பங்கேற்ற ‘ஹெய்ம்டெக்ஸ்டில்’ கண்காட்சியில் கோ-ஆப்டெக்ஸ் சார்பில் ஸ்டால்களை அமைத் தோம். படுக்கைவிரிப்பு, மேசை விரிப்பு, திரைச்சீலை, டவல், உணவு மேசைகளில் பயன்படுத்தப்படும் ‘ரூலர்’ போன்ற பல்வேறு தயாரிப்புகளை அதில் பார்வைக்கு வைத்திருந் தோம். அதைப் பார்த்து பின்லாந்து, துருக்கி, பிரான்ஸ், இத்தாலி நாடுகளைச் சேர்ந்த நிறுவனத்தினர் நம்மை அணுகியுள்ளனர். ஜெர்மனியை சேர்ந்த ‘கெப்பா’ என்னும் நிறுவனம் ரூ.25 லட்சத்துக்கான ஆர்டரை கொடுத்துள்ளது.

இதுபோல், ஸ்பெயினில் வசிக்கும் இந்தியரான கமலா பர்மர், கோ-ஆப்டெக்ஸிடமிருந்து வாங்கும் லுங்கிகளை, குறிப்பாக குறிஞ்சிப்பாடி லுங்கிகளை சட்டையாகவும், சட்டையின் மீது அணியும் கோட்டாகவும், ஜீன்ஸ் பேன்ட்டில் வரும் லைனிங்காகவும், ‘டை’, ‘லேப்-டாப்’ மற்றும் ஐ-பேட்களை எடுத்துச் செல்லும் பைகளாகவும் உருமாற்றி ஐரோப்பாவில் பல இடங்களில் விற்பனை செய்துவருகிறார். அவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

குறிஞ்சிப்பாடியில் இந்த லுங்கிகளை தயார் செய்து தரும் நெசவாளர்களின் புகைப் படங்களையும், அந்த லுங்கிகளை உருமாற்றும் ஐரோப்பிய வடிவமைப்பாளர்களின் புகைப் படங்களையும், அத்தயாரிப்பு களுடன் இணைத்து அவர் வெளியிடுகிறார். இதனால், தமிழக தயாரிப்புகளுக்கு விளம்பரம் கிடைப்பதுடன், அதை வாங்குவது இந்திய நெசவாளருக்கு உதவிகரமாக இருக்கும் என்ற எண்ணத்தையும் அங்குள்ள மக்கள் மனதில் அவர் ஏற்படுத்துகிறார்.

இதுபோன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை வருமானம் கிடைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x