Published : 06 Feb 2015 11:51 AM
Last Updated : 06 Feb 2015 11:51 AM

எத்திசையும்: விஸ்வரூப தரிசனம் போதாதா?

ஃபுகுஷிமா அணு உலை விபத்து! மறக்க முடியுமா? 2011-ல் நிகழ்ந்த இந்த விபத்துக்குப் பிறகு 48 அணு உலைகளை மூடிய ஜப்பான், தற்போது மீண்டும் அணு உலைகளைத் திறக்க முடிவு செய்திருக்கிறது. கடந்த நவம்பர் மாதம், மின்தேவைகளைக் காரணம் காட்டி, செண்டாய் அணு உலையைத் திறக்க சாஸ்துமா செண்டாய் நகராட்சி அனுமதி வழங்கியது ஜப்பான் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அணு எப்படியெல்லாம் விஸ்வரூபம் எடுக்கும் என்பதை உலகிலேயே அதிகம் உணர்ந்த ஜப்பானே மறுபடியும் அணுவோடு விளையாடலாமா?

‘எண்ணெய்’யா பிரச்சினை?

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எண்ணெய் விலை சரிந்திருப்பதால், வடஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் போராட்டம் வெடித்திருக்கிறது. அந்நாட்டின் ஏற்றுமதியில் 97% எண்ணெய்ப் பொருட்கள்தான். இந்நிலையில், சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை குறைந்ததால், பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். இதில் என்ன இருக்கிறது, வழக்கமான விஷயம்தானே என்கிறீர்களா? இதைக் கேளுங்கள்: 1986-ல் இதே மாதிரியான சூழல் ஏற்பட்ட போது, அந்நாட்டில் உருவான உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை: 2,00,000.

உளவுத் துறை எனும் நாடகத் துறை!

உளவுத் துறையையே கலைக்க முடிவுசெய்திருக்கிறது அர்ஜென்டினா! 1994-ல் யூதர்கள் மையத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்திய அரசு வழக்கறிஞர் ஆல்பர்ட்டோ நிஸ்மேன் கொல்லப்பட்டதுதான் இதற்குக் காரணமாம். இந்தக் கொலையின் பின்னணியில் உளவுத் துறை அதிகாரிகள் இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டதால், இந்த அதிரடி முடிவை எடுத்திருக்கிறார் அதிபர் கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ். இந்தத் திடீர் திருப்பங்கள், அதிரடிக் காட்சிகளெல்லாம் போதாதென்று இன்னொரு பூகம்பம் அங்கே உருவாகியிருக்கிறது. ஆம், இந்த விசாரணையைக் குலைக்க முயற்சி செய்தவரே கிறிஸ்டினாதான் என்று ஒரு குண்டைப் போடுகிறார்கள்!

எரியும் வீட்டில் பிடுங்கியது மட்டும் லாபம்!

எதிலெல்லாம் கைவைப்பது என்ற எல்லையே இல்லாமல் போய்விட்டது. எபோலாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கான நிவாரண நிதியாக சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாயை உலக நாடுகள் அளித்திருக்கின்றன. அதில் 40% பணம்தான் பாதிக்கப்பட்ட நாடுகளைச் சென்றடைந்திருக்கிறதாம்! நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிரெப்பின் இதைக் கண்டுபிடித்திருக்கிறார். நிதியுதவி சரியானநேரத்தில் கிடைத்திருந்தால், எபோலா பரவலைக் கட்டுப்படுத்திப் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்று வருத்தத்துடன் கூறுகிறார் கிரெப்பின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x