Published : 05 Feb 2015 10:27 AM
Last Updated : 05 Feb 2015 10:27 AM

தமிழ் உட்பட இந்திய மொழிகள் வளப்படுத்தப்படும்: டெல்லியில் தமிழர்கள் மத்தியில் யோகேந்திர யாதவ் பிரச்சாரம்

டெல்லியில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற் கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ், தமிழ் உட்பட இந்திய மொழிகள் அனைத்தும் வளப்படுத்தப்படும் என கூறியுள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும் ஆர்.கே.புரம் தொகுதியில் நேற்று முன்தினம் இரவு யோகேந்திர யாதவ் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

மிகவும் பழமையானது தமிழ் மொழி. எனவே தமிழ் மொழியின் முன்பு இந்தி உள்ளிட்ட மொழிகள் பச்சைக் குழந்தைகள் போன்றவை. டெல்லியில் தமிழ் மொழிக் கல்விக்கான பள்ளிகள் ஏழு இருப்பதாக அறிந்தேன். ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் அவற்றின் வளர்ச்சி சீர்படுத்தப்படும். தமிழ் உட்பட அனைத்து மாநில மொழிகளும் வளப் படுத்தப்படும்.

நாட்டின் கடைக்கோடி மக்களும் டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என விரும்புகின்றனர். ஏனெனில், உண்மை மற்றும் நேர்மைக்காக பாடுபடும் ஒரே கட்சி ஆம் ஆத்மி. இந்த இரண்டும் இன்று அடிமைப்பட்டுக் கிடக்கிறது. இதை விடுவிக்கும் பொருட்டு நடை பெறும் டெல்லி தேர்தலும் ஒரு சுதந்திர போராட்டம் போன்றது.

இதற்காக, பிஹார், ராஜஸ்தான், பஞ்சாப், தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளம் உட்பட நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லியில் வந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். நாட்டின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் வாழ்வதுதான் டெல்லி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

யோகேந்திர யாதவுடன், தமிழகத் திலிருந்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்களான கிறிஸ்டினா சாமி தலைமையில் சுமார் 200 பேரும் பிரச்சாரம் செய்தனர். இதில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், ஏற்றுமதியாளர்கள், கல்லூரி மாணவர்கள், வெளிநாட்டு பல்கலையில் பயிலும் மாணவர்கள், வெளிநாடுவாழ் தமிழர்கள் மற்றும் கட்டிட பொறியாளர்கள் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

பிரச்சாரம் முடிந்த பிறகு அவர்கள் தங்கியிருந்த முனீர்கா பகுதிக்கு வந்த யாதவ், நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ஆர்.கே.புரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஷாஜியா இல்மி ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டு பாஜக உறுப்பினர் அணில் சர்மாவிடம் தோல்வி அடைந்தார். இந்த முறை ஆம் ஆத்மி சார்பில் பிரமிளா டோக்காஸ் போட்டியிடுகிறார். இவர் இந்த பகுதியின் மூன்று வார்டுகளில் உறுப்பினராக இருந்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x