சட்டப்பேரவையில் அமளி: தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்

சட்டப்பேரவையில் அமளி: தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்
Updated on
1 min read

சட்டசபையில் நடந்த அமளியின்போது சிறப்பு உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கடந்த வியாழக்கிழமை எதிர்கட்சி துணைத் தலைவர் மோகன்ராஜ் பேசுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி ஒரு கருத்தை தெரிவித்தார். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பதிலுக்கு தேமுதிக உறுப்பினர்களும் குரல் கொடுத்ததால் பேரவையில் பெரும் அமளி ஏற்பட்டது.

இதையடுத்து, தேமுதிக உறுப்பினர்கள் அனைவரையும் அவையில் இருந்து வெளியேற்ற பேரவைத் தலைவர் ப.தனபால் உத்தரவிட்டார். அவர்களை அவைக் காவலர்கள் வெளியேற்றினர். அதன்பிறகு பேரவையின் வராண்டாவில் அமர்ந்து தேமுதிக உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை அப்புறப்படுத்தும்போது அவைக் காவலரும், வண்ணாரப்பேட்டை காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளருமான விஜயனை தாக்கியதாக தேமுதிக கொறடா சந்திரகுமார், தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் கே.தினகரன், சி.எச்.சேகர் ஆகியோர் மீது கோட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி மூன்று பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

உயர்நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ் முன்பு இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “அரசியல் உள்நோக்கத்துக்காக இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதிட்டனர். அரசு வழக்கறிஞர் சண்முகவேலாயுதம் வாதிடுகையில், ‘‘தேமுதிக கொறடா சந்திரகுமார் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறவில்லை. மற்ற இரண்டு எம்.எல்.ஏ.க்களும் சாட்சியை கலைக்கக்கூடும் என்பதால் அவர்களுக்கு முன்ஜாமீன் அளிக்கக்கூடாது’’ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேமுதிக எம்எல்ஏக்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in