

மதுரையைப் போல் கிருஷ்ணகிரியிலும் கிரானைட் கொள்ளை நடந்திருப்பதாகவும், இதுகுறித்தும் சகாயம் குழு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கத்தைச் சேர்ந்தவர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2012-ம் ஆண்டு 5 வட்டங்களிலும் உள்ள குவாரிகளில், ஆட்சியர் உத்தரவின் பேரில் 5 உதவி ஆட்சியர்கள் நிலையில் உள்ள அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் கிரானைட் குவாரிகளில் எவ்வளவு ஆழம் தோண்டப்பட்டுள்ளது? அதில் வெட்டி எடுக்கப்பட்டுள்ள கற்களின் அளவு எவ்வளவு? ஒவ்வொரு குவாரியிலும் வெட்டி எடுக்கப்பட்ட கற்களுக்கு முறையான ராயல்டி செலுத்தப்பட்டதா? என்பது போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டது. ஆனால் ஆய்வின் அறிக்கை குறித்து எவ்வித தகவலும் வெளி வரவில்லை.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் கனிமவள முறைகேடு தொடர்பாக சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வேடியப்பன், தகவல் அறியும் சட்டத்தின் மூலம் ஆவணங்களை பார்வையிட்டார்.
இது குறித்து வேடியப்பன் கூறியதாவது: கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கிரானைட் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆதாரங்களை திரட்டி, சகாயம் குழுவினருக்கு அறிக்கை அனுப்ப உள்ளோம். அதற்காக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்கள், பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை சேகரித்து வருகிறோம்.
அனுமதி பெறாமல் பல கிரானைட் குவாரிகள், மெருகூட்டும் நிறுவனங்கள் இயங்கி வருவதாகத் தெரிகிறது. மேலும், கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியரால் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவின் சட்ட நடவடிக்கைகள், குற்ற வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக பல குவாரிகளில் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. அரசுக்கு செலுத்த வேண்டிய ராயல்டியை பல குவாரிகள் செலுத்தாமல் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு
இதேபோல் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாமல் பல குவாரிகள் இயங்கி வருகின்றன.வெளிமாநிலத்திலிருந்து கூலிக்கு தொழிலாளர்களை அழைத்து வந்து கொத்தடிமைகளாக நடத்தி வருகின்றனர். எங்களுக்கு கிடைத்துள்ள ஆதாரங்களை கொண்டு சகாயத்தை நேரில் சந்தித்து புகார் அளிக்க உள்ளோம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்துள்ள கிரானைட் முறைகேடுகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும், துண்டுப் பிரசுரங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.