

டீசல் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாதது ஏன் என்பது குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. இதில் பேசிய உறுப்பினர்கள் பார்த்திபன் (தேமுதிக), டில்லிபாபு (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) ஆகியோர் டீசல் விலை குறைந்துவரும் நிலையில் பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரினர்.
இதற்கு பதிலளித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
"டீசல் விலை குறைந்துள்ளதால் பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டும் என சில உறுப்பினர்கள் பேசியுள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டபோது டீசல் விலை லிட்டருக்கு ரூ.43.10 ஆக இருந்தது. தற்போது லிட்டர் ரூ.48.32 ஆக உள்ளது. அதாவது, 2011-ம் ஆண்டைவிட தற்போது டீசல் விலை ரூ.5.22 அதிகமாகத்தான் உள்ளது.
2011-ம் ஆண்டுக்கு பிறகு டீசல் விலை கணிசமாக உயர்த்தப்பட்டபோது மற்ற மாநிலங்கள் பேருந்து கட்டணத்தை உயர்த்தின. ஆனால், தமிழக அரசு கட்டணத்தை உயர்த்தாமல் கூடுதல் டீசல் விலையை மானியமாக வழங்கி வருகிறது. 2012-13ம் ஆண்டு ரூ.200 கோடியும், 2013-14ல் ரூ.500 கோடியும் 2014-15ல் ரூ.600 கோடியும் மானியமாக போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
டீசல் விலை உயர்வு மற்றும் இயக்கும் முறைகளுக்கான விலை உயர்வை சரிகட்டுவதற்காக 2013 - 2015 ஆண்டுகளில் முதலீடு உதவித் தொகை முறையில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நடைமுறைச் செலவினமாக ரூ.350 கோடி வீதம் வழங்கப்பட்டது.
கடந்த 3 ஆண்டுகளில் மொத்த தொகையாக ரூ.2,000 கோடி அரசு போக்குவரத்து கழகங்களுக்கு அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. தற்போதும் தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் கி.மீ.க்கு 42 பைசா என்ற குறைவான கட்டணத்திலேயே பேருந்துகளை இயக்கி வருகின்றன.
மேலும், மாதம் ரூ.295.44 கோடியாக இருந்த பணியாளர் செலவினம் ரூ.421.22 கோடியாக உயர்ந்துள்ளது. டயர் மற்றும் உதிரி பாகங்களின் விலையும் 9.5 சதவீதம் உயர்ந்துள்ளன. ஒட்டுமொத்த செலவினங்கள் அதிகரித்துள்ள போதிலும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் பேருந்து கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது" என்றார் முதல்வர் பன்னீர்செல்வம்.