

சிறைத்துறை அதிகாரிகளை மிரட்டிய கைதிகள் வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். சென்னை புழல் சிறையில் அல்-உம்மா தீவிரவாதிகள் 9 பேர் உயர்மட்ட பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் செல்போன் மூலம் பேசுவது, சிறைக் காவலர்களை மிரட்டுவது, தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக புகார்கள் கூறப்பட்டன. புழல் சிறையில் கடந்த 5-ம் தேதி சிறைத்துறை லஞ்ச ஒழிப்பு துணைக் கண்காணிப்பாளர் லட்சுமணன் தலைமையில் காவல் துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
தீவிரவாதிகள் அடைக்கப்பட் டிருந்த அறையில் சோதனை நடத்தியபோது உமர் பாரூக் என்பவரிடம் செல்போன் இருப்பதை கண்டுபிடித்தனர். சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரர் ஒருவர் அதை எடுக்க முயன்றபோது உமர்பாரூக் மற்றும் உடனிருந்த கைதிகளான ராஜா உசேன், சாகுல் அமீது ஆகிய 3 பேரும் சேர்ந்து அந்த போலீஸ்காரரை தாக்கினார்கள். மற்ற போலீஸாருக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புழல் போலீஸில் புகாரும் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து அந்த அறையில் அடைக்கப்பட்டிருந்த 9 பேரும் சாப்பாடு கொடுக்கச் செல்லும் சிறைக் காவலர்களை ஆபாசமாக திட்டுவது, மிரட்டுவது போன்ற செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்ய சிறைத்துறை தலைவர் திரிபாதி உத்தரவிட்டார். அதன்படி, உமர் பாரூக் சேலம் சிறைக்கும், ராஜா உசேன் வேலூர் சிறைக்கும், சாகுல் அமீது கடலூர் சிறைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
நேற்று காலை 6.30 மணி யளவில் அவர்கள் 3 பேரும் தனித்தனி வேன்களில் ஏற்றப் பட்டு துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸாரின் பலத்த பாதுகாப்புடன் அந்தந்த சிறை களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.