

தமிழகத்தில் நடந்த இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாமில் 65.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் கே.குழந்தைசாமி தெரிவித்தார்.
நாடு முழுவதும் இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள் என 43,051 இடங்களில் இதற்காக முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவை தவிர பயணம் மேற்கொள்ளும் குழந்தைகளின் வசதிக்காக பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 1,662 நகரும் சொட்டு மருந்து முகாம்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. 1,000 நடமாடும் குழுக்களும் அமைக்கப் பட்டிருந்தன.
சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த முகாமுக்கு ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளைக் கொண்டுவந்தனர். முன்னதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், கோடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். அப்போது சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) ஆனந்த் உடனிருந்தார்.
இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் (டிபிஎச்) டாக்டர் கே.குழந்தைசாமி கூறியதாவது:
தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்டு சுமார் 70 லட்சம் குழந்தைகள் உள்ளனர். மாலை 6 மணி நிலவரப்படி சுமார் 65.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டுள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கு வீடுவீடாக சென்று சுகாதாரப் பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்குவார்கள். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்புத் தரவேண்டும். இவை தவிர இன்னும் 2 நாட்களுக்கு ரயில்
நிலையங்கள், பேருந்து நிலையங் கள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் செயல்படும். விடுபட்ட குழந்தைகளை பெற்றோர் அழைத்து வந்து போலியோ சொட்டு மருந்து போட்டுச் செல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் மாநகராட்சி மூலம் 1,502 இடங்களில்
போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாலை 6 மணி வரையிலான நிலவரப்படி சென்னையில் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட 6,63,976 குழந்தைகளில், 6,36,429 குழந்தைகளுக்கு (95.8 சதவீதம்) போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது.