Published : 05 Feb 2015 09:28 PM
Last Updated : 05 Feb 2015 09:28 PM

பெண் குழந்தைகளுக்காக புதிய சேமிப்புத் திட்டம்: அஞ்சல் துறை அறிமுகம்

இந்திய அஞ்சல் துறை மூலம் பெண் குழந்தைகளுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சேமிப்புத் திட்டம் நேற்று தருமபுரியில் தொடங்கி வைக்கப்பட்டது.

பெண் குழந்தைகளின் நலன் கருதி இந்திய அஞ்சல் துறை ‘சுகன்யா சம்ரிதி’ என்ற புதிய சேமிப்புத் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் நேற்று தருமபுரி மாவட்ட தலைமை அஞ்சலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின்போது, பெண் குழந்தை பெயரில் இந்த புதிய சேமிப்புக் கணக்கை துவங்கிய வாடிக்கையாளரிடம் தருமபுரி மாவட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் அதற்கான ஆவணங்களை வழங்கினார்.

பின்னர் அவர் கூறும்போது, ‘இந்த புதிய சேமிப்புக் கணக்குத் திட்டம் இந்தியா முழுக்க செயல்பாட்டுக்கு வந்துள்ளது. பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வமான பாதுகாவலர் இந்த கணக்கை துவங்கலாம். பிறந்தது முதல் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் இந்த கணக்கை துவங்கலாம். ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.1000 செலுத்த வேண்டும்.

அதிக பட்சமாக ரூ.1.5லட்சம் வரை செலுத்தலாம். செலுத்திய தொகைக்கு 9.1சதவீதம் கூட்டு வட்டி வழங்கப்படும். கணக்கு துவங்கிய தேதியில் இருந்து 21 ஆண்டுகள் அல்லது பெண் குழந்தையின் திருமணம் இவற்றில் எது முன்னர் வருகிறதோ அது சேமிப்புக் கணக்கின் முதிர்வு தேதியாக எடுத்துக் கொள்ளப்படும். பெண் குழந்தையின் படிப்புச் செலவுக்காக 18 வயதில் 50 சதவீதம் தொகையை பெற முடியும்.

ஒரே பெற்றோரின் 2 பெண் குழந்தைகள் வரை மட்டும் தான் அதிகபட்சம் இந்த கணக்கு துவங்க முடியும். தருமபுரி மாவட்டத்தில் தலைமை அஞ்சலகம், 30 துணை அஞ்சலகங்கள், 225 கிளை அஞ்சலகங்கள் என அனைத்து இடங்களிலும் இந்த சுகன்யா சம்ரிதி சேமிப்புத் திட்டத்தில் கணக்கு துவங்க முடியும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x