Published : 09 Feb 2015 11:21 AM
Last Updated : 09 Feb 2015 11:21 AM

சான்றோர்களை உருவாக்கிய சென்னை சட்டக் கல்லூரி

சென்னை சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டு விரைவில் 125 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன.

கடந்த 1891-ம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரி உருவானது. இந்தோ-சார்சனிக் கட்டிடக் கலையின் சிறப்பை பறைசாற்றும் இன்றைய சட்டக் கல்லூரி கட்டிடம் 1899-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. பாரம்பரியம் மிக்க இந்த சட்டக் கல்லூரியில் பயின்ற ஏராளமானோர் பின்னாளில் இந்தியாவின் மிகச் சிறந்த சான்றோர்களாக ஜொலித்துள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட் ராமன் இந்த சட்டக் கல்லூரி யில்தான் பயின்றார். சென்னை சட்டக் கல்லூரியில் பயின்ற மாணவர்களில் மூன்று பேர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை அலங்கரித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது தலைமை நீதிபதி எம்.பதஞ்சலி சாஸ்திரி, மற்றொரு தலைமை நீதிபதி கொகா சுப்பா ராவ், உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி பதவியிலிருந்து அண்மையில் ஓய்வுபெற்று, தற்போது கேரள மாநில ஆளுநராக உள்ள பி.சதாசிவம் ஆகியோர்தான் அந்த சிறப்புக்குரியவர்கள்.

அதேபோல் இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்கத்தில் மிக முக்கிய பங்காற்றிய அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், இந்திய நீதி பரிபாலனத்தின் பிதாமகன் எனப் போற்றப்படும் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் ஆகி யோரும் சென்னை சட்டக் கல்லூரியின் மாணவர்களே ஆவர்.

திருவாங்கூர் திவான் சி.பி.ராமசாமி அய்யர், நீதிக்கட்சி தலைவர் ஆற்காடு ராமசாமி முதலியார், தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவச்சலம், பசுமைப் புரட்சியின் தந்தை எனப் போற்றப்படும் சி.சுப்ரமணியம், ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக பதவி வகித்த கே.சந்தானம், கல்வியாளரும், பிரபல வழக்கறிஞருமான பி.எஸ்.சிவசாமி அய்யர், சுதந்திரப் போராட்ட வீரரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தீரர் சத்தியமூர்த்தி, கல்வியாளர் தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியார், சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார், காங்கிரஸ் அமைச் சரவையில் பல ஆண்டுகள் நிதிய மைச்சராக பதவி வகித்த ப.சிதம்பரம் போன்றவர்களும் சென்னை சட்டக் கல்லூரியில்தான் பயின்றனர். இந்தியாவின் முன் னாள் பாதுகாப்பு அமைச்சர் வி.கே.கிருஷ்ண மேனன், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி ஆகியோரும் இங்கு பயின்றுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகள், தற்போதைய நீதிபதிகள், உயர் நீதிமன்றங்க ளின் முன்னாள் மற்றும் இந்நாள் நீதிபதிகள் பலர், மிக மூத்த வழக்கறிஞர்கள், அரசியல் தலை வர்கள் என நூற்றுக்கணக்கான அறிவுசார் பெரியோரை உருவாக்கிய பெருமை இந்த சட்டக் கல்லூரிக்கு உண்டு.அத்தகைய பெருமைக்குரிய இந்தக் கல்லூரிதான் தற்போது இட மாற்றப் பிரச்சினையால் சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x