

தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தானாக முன் வந்து ரத்து செய்துள்ளது. தனியார் நிறுவனத்தின் புகாரை வழக்காக எடுத்ததால், மின் துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சமீபத்தில் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தானாக முன் வந்து, தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியதால், நுகர்வோர் அமைப்புகள் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்தன. இந்நிலையில், ஒழுங்குமுறை ஆணையத்தின் மற்றொரு உத்தரவு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதன் விவரம்:
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த எஸ்.ஆர்.பி.கன்ஸ்ட்ரக்ஷன் என்ற தனியார் கட்டுமான நிறுவனம், கடலூர் புதுப்பாளையத்தில் தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதிக் கழகத்துக்கு 110 வீடுகளைக் கட்டிக் கொடுக்கிறது. இந்த நிறுவனம் தற்காலிக மின் இணைப்புக் கட்டண விகிதம் ஐந்தாம் அட்டவணைப்படி கட்டணம் செலுத்தி வந்தது. ஆனால் இந்நிறுவனம் 2,000 சதுர மீட்டருக்கு அதிகமான இடத்தில் கட்டிடம் கட்டியதால், அதிகக் கட்டணம் கொண்ட தாழ்வழுத்தப் பிரிவு ஆறின் படி கட்டணம் செலுத்த வேண்டும்.
இதுகுறித்து அறிந்த மின் துறையின் மின் திருட்டு தடுப்பு பறக்கும் படையினர், மின் திருட்டு எனக் கணக்கிட்டு, ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 13 ரூபாய் இழப்பாக நிர்ணயம் செய்தனர். ஆனால், இந்த இழப்புத் தொகை நிர்ணயம் தவறானது என்று, கட்டுமான நிறுவனம் சார்பில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு கடந்த செப்டம்பர் 25-ல் புகார் கடிதம் அனுப்பப்பட்டது.
இக்கடிதத்தை ஒழுங்குமுறை ஆணையம் தானாக முன் வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. மின் கட்டணத்தை முறைப்படி வசூலிக்கத் தவறியதற்காகவும், மின் திருட்டு வழக்காக எடுத்துக் கொண்டதற்காகவும், உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு, கடலூர் புதுப்பாளையம் உதவி செயற் பொறியாளருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
உதவி செயற்பொறியாளர் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் ஆஜராகி, இழப்புத் தொகை வேண்டாமென்றும், கட்டண வேறுபாடுத் தொகையை மட்டும் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து, மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் அக்ஷய்குமார், உறுப்பினர்கள் நாகல்சாமி, ராஜகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட இழப்புத் தொகையை ரத்து செய்து, வேறுபாடு தொகையை மட்டும் செலுத்த அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த உத்தரவு மின் துறை பொறியாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட கடலூர் புதுப்பாளையம் டவுன் உதவி பொறியாளரிடம் கேட்டபோது, “பொதுவாக கட்டண முறையில் மாற்றம் ஏற்பட்டால், மின் திருட்டாகத்தான் எடுத்து இழப்பீடு விதிப்போம். இப்பிரச்சினை ஒரு விதிவிலக்காக எடுக்கப்பட்டுள்ளது. ஆணைய உத்தரவு கைக்கு வந்த பிறகே முழு விவரம் தெரியும்” என்றார்.
இதேபோல், தமிழ்நாடு மின்வாரிய கடலூர் மேற்பார்வைப் பொறியாளர் மற்றும் மின் வாரிய தலைமை அலுவலக நிதிப் பிரிவு இயக்குநர் அருள்சாமியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “எங்களுக்கு ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவு கிடைக்கவில்லை” என்றார். இப்பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு நுகர்வோர் முற்போக்கு பேரவை தலைவர் டி.சடகோபன் கூறியதாவது:
தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக இந்த வழக்கை ஒழுங்குமுறை ஆணையம் எடுத்திருந்தாலும், மற்ற நுகர்வோருக்கு இந்த உத்தரவு முன்னுதாரணமாக அமையும். அதேநேரம், உரிய நேரத்தில் சரியான மின் கட்டணத்தை மின் துறையினர் வசூலிக்காததால், அந்த தொகை மின் வாரியத்துக்கு உரிய நேரத்தில் வந்து சேரவில்லை. மின் வாரிய அதிகாரிகள் முறையாக கண்காணிப்புப் பணியை மேற்கொண்டிருந்தால் இதுபோன்ற இழப்புகள் ஏற்படாது.
எனவே, இந்த பணிகளை சரியாக மேற்கொள்ளாத அதிகாரிகளிடம், மின் கட்டணத்தின் சரியான தொகை, தாமதமாக வந்து சேரும் காலத்துக்கான வட்டி விகிதம் மற்றும் கவனமில்லாமல் செயல்பட்டதற்கு அபராதம் விதித்தால் மட்டுமே, இனி தவறுகள் நடக்காமல் தடுக்க முடியும்” என்று தெரிவித்தார்.