

சட்டக் கல்லூரி மாணவர்கள் நேற்று மொட்டை அடித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பாரிமுனையில் உள்ள அம்பேத்கர் சட்டக் கல்லூரியை இடம் மாற்றக் கூடாது என்று மாணவர்கள் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது பாடையில் ஒரு மாணவர் இறந்தவர் போல படுத்துக்கொள்ள அவரைச் சுற்றி 6 மாணவர்கள் மொட்டை அடித்துக்கொண்டனர். பின்பு, அந்த மாணவரை கல்லூரி வளாகம் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்போது தமிழக அரசு இறந்துவிட்டது என மாணவர்கள் ஒப்பாரிவைத்தனர்.
போராட்டம் குறித்து சட்டக் கல்லூரி மாணவர் பாஞ்சாலி ராஜன் கூறும்போது, “எங்களின் 5 நாள் போராட்டத்துக்கு தமிழக அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. சட்டக் கல்லூரி இடம் மாற்றம் தொடர்பாக நாளேடுகளில் வெளியான செய்திகளுக்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை. ஒவ்வொரு சட்டக் கல்லூரியும் ஒரு நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் இருக்க வேண்டும் என்று விதி இருக்கிறது. ஆனால், அதன்படி அமைந்திருக்கும் ஒரே சட்டக் கல்லூரியான அம்பேத்கர் சட்டக் கல்லூரியையும் இடமாற்றம் செய்ய அரசு விரும்புகிறது. ஏற்கெனவே சட்டக் கல்லூரி உள்ள காஞ்சிபுரத்தில் மேலும் ஒரு கல்லூரி அமைத்தால், மாநிலத்தின் தலைநகரமான சென்னையில் இருக்கும் மாணவர்கள் எங்கே போவார்கள்?” என்றார்.
சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவி கூறும்போது, “மற்ற கல்லூரிகளில் சேருவதை விட அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சேர அதிக மதிப்பெண்கள் தேவை. நான் ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு வந்ததே இந்த சட்டக் கல்லூரியில் படித்த அனுபவம் வேண்டும் என்பதற்காகத்தான்” என்றார். சட்டக் கல்லூரியை இடம் மாற்றக் கூடாது என்று திமுக மாணவர் அணி மாநிலச் செயலாளர் இள.புகழேந்தி தமிழக அளுநரிடம் மனு கொடுத்தார்.