

தமிழகத்தில் முதல்கட்டமாக 251 காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது என்று உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஐ.பிரகாஷ்ராஜ், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:
விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப் படுபவர்கள், கண்மூடித்தனமாக தாக்கப்படுவதால் சிலர் இறந்து விடுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதைத் தடுக்கும் வகையில், காவல் நிலையங் களில் நடக்கும் விசாரணையை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இதன்மூலம் விசாரணை வெளிப்படையாக நடப்பதுடன், தவறு செய்யும் காவல் அதிகாரிகளை கண்டறியவும் முடியும். எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று நடந்தது. அப்போது, அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘தமிழகத்தில் உள்ள 1,567 காவல் நிலையங்களிலும் படிப்படியாக கண்காணிப்பு கேமரா பொருத்துவதென அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக கடந்த ஆண்டு 251 காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு ரூ.1.75 கோடி ஒதுக்கப்பட்டது. இதுவரை 22 மாவட்டங்களில் 170 காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுவிட்டது. 81 காவல் நிலையங்களில் தற்போது பணி நடந்து வருகிறது. மீதமுள்ள காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
முதல்கட்டமான 251 காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியை மார்ச் 9-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இதுகுறித்த அறிக்கையை தமிழக காவல்துறை இயக்குநர் அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்ய வேண்டும். அதில், கண்காணிப்பு கேமராக்கள் காவல்நிலையத்துக்குள் பொருத்தப்படுகிறதா அல்லது காவல் நிலைய வளாகத்தில் பொருத்தப்படுகிறதா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.