

மீத்தேன் வாயு திட்டத்தை அரசு ஆதரிக்குமா என திமுக உறுப்பினர் கேட்டபோது, 'மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் ஆதரிக்க மாட்டோம்' என்று தொழில்துறை அமைச்சர் தங்கமணி உறுதியுடன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3-வது நாளாக விவாதம் நடந்தது. இதில், மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா பேசியதாவது:
தேனி மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து தினமும் 3 லட்சத்து 40 ஆயிரம் லிட்டர் தண்ணீரும், 3 ஆயிரம் யூனிட் மின்சாரமும் பயன்படுத்தப்படும் என்று கூறுகின்றனர். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்த ஆய்வுத் திட்டத்தால் அப்பகுதியில் உள்ள அரியவகை பறவை இனங்களும் பாதிக்கப்படும்.
அதேபோல, காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் வாயு திட்டத்தை செயல்படுத்தினால், பெருமளவு பாதிப்பு ஏற்படும். எனவே, மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மீத்தேன் திட்டத்தை அரசு ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும்.
அப்போது குறுக்கிட்டு பேசிய தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி ''மீத்தேன் திட்டம் முந்தைய திமுக ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட திட்டம் ஆகும். மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிற எந்த திட்டத்தையும் ஒருபோதும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம்'' என்று கூறினார்.
திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி பேசியபோது, "மீத்தேன் திட்டத்தை இந்த அரசு ஆதரிக்கிறதா, இல்லையா'' என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் தங்கமணி, "கடந்த 2011-ல் திமுக ஆட்சியின்போதுதான் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இன்று திட்டத்தை நிராகரிப்பவர்கள், அப்போது ஆதரவாக இருந்தனர். இந்த திட்டம் குறித்து ஆராய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. மீண்டும் சொல்கிறேன். மக்களை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் இந்த அரசு ஆதரிக்காது" என்றார்.