Published : 19 Feb 2015 05:24 PM
Last Updated : 19 Feb 2015 05:24 PM

வனக் கல்லூரி மாணவர்களின் வேலை உரிமையை காப்பாற்றுங்கள்: ராமதாஸ்

வனக் கல்லூரி மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களின் உயிரையும், வேலை உரிமையும் அரசு காப்பாற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''வனச்சரகர், வனவர் ஆகிய பணியிடங்களில் 100 விழுக்காடு இட ஒதுக்கீடு கோரி 24 நாட்களாக போராட்டம் நடத்திவரும் மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மாணவர்கள், தங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததை அடுத்து கடந்த 3 நாட்களாக சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். இவர்களில் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வனக் கல்லூரி மாணவர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. பறிக்கப்பட்ட உரிமைகளை திரும்ப வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தான் அவர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு அவர்களின் வேலைவாய்ப்பு உரிமை பறிக்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த ஆண்டே மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த விஷயத்தில் மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே கோரிக்கையை கடந்த வாரமும் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், பொறுப்பற்ற அரசின் காதுகளில் அது விழவில்லை.

வனக்கல்லூரி மாணவர்கள் பிரச்சினையில் தமிழக அரசு பொறுப்பான முறையில் செயல்பட்டிருந்தால் இந்தப் போராட்டத்தை எப்போதோ முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியும். ஆனால், மாணவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை விட ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் மேலிடத்தால் நிர்ணயிக்கப்பட்ட வாக்குகளை வாங்குவது தான் முக்கியம் என்று கருதியதுதான் இந்த சிக்கல் தீவிரமடைந்ததற்கு காரணம்.

இப்போதும் இந்த பிரச்சினையில் அமைச்சர்கள் முதிர்ச்சியான அணுகுமுறையை கடைபிடிக்காததன் விளைவு தான் இதுவரை சாதாரண போராட்டங்களை நடத்தி வந்த மாணவர்கள், அமைச்சர்களுடனான பேச்சுக்குப் பிறகு சாகும் வரை உண்ணாநிலையை தொடங்கியிருக்கின்றனர்.

வனச்சரகர் பணியில் வனக் கல்லூரி மாணவர்களுக்கு 100 சதவீத இட ஒதுக்கீடு வழங்க ஒப்புக்கொண்ட தமிழக அரசு, வனவர் பணிக்கான இடஒதுக்கீட்டு விஷயத்தில் சுமூக உடன்பாடு எட்டப்படும் வரை வனவர் பணிக்கான போட்டித் தேர்வை ஒத்தி வைத்திருந்திருக்கலாம்.

அதைவிடுத்து ஒருபுறம் மாணவர்களுடன் பேச்சு நடத்திக் கொண்டு இன்னொருபுறம் போட்டித் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை வினியோகித்தது தமிழக அரசு மற்றும் அமைச்சர்கள் மீதான நம்பகத் தன்மையை போக்கிவிட்டது. சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டுள்ள மாணவர்களின் உடல்நிலை மோசமடைந்து வரும் நிலையில் அரசு உடனடியாக தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

வனவியல் பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் மற்ற பணிகளுக்கு செல்வது சாத்தியமல்ல. இதைக் கருத்தில் கொண்டு வனத்துறை சார்ந்த வனச்சரகர், வனவர் ஆகிய பணிகளில் வனக் கல்லூரி மாணவர்களுக்கு 100 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

தமிழக அமைச்சர்களையோ அல்லது அரசு செயலாளர்கள் மற்றும் வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் அடங்கிய குழுவையோ அனுப்பி மாணவர்களுடன் பேச வேண்டும்; மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களின் உயிரையும், வேலை உரிமையும் அரசு காப்பாற்ற வேண்டும்.'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x