Published : 03 Feb 2015 05:53 PM
Last Updated : 03 Feb 2015 05:53 PM

நிலத்தடி நீரை நச்சாக மாற்றி வரும் குரோமியம் கழிவு

ராணிபேட்டையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் டி.சி.சி.எல். நிறுவனத்தின் குரோமியம் கழிவு குவிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் 30கிமீ சுற்றுப்பாதையில் நிலத்தடி நீர் நச்சுமயமாக மாறிவருவதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

டி.சி.சி.எல். நிறுவனத்தின் டன் கணக்கிலான குரோமியம் கழிவுகள் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள நிலப்பரப்பில் சுமார் 20 ஆண்டுகளாகக் கொட்டப்பட்டு வருகிறது.

இதனால் நிலத்தடி நீர் ஏற்கெனவே அப்பகுதிகளில் நச்சுமயமாகியுள்ளது என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

1976-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட டி.சி.சி.எல். நிறுவனம் சோடியம் டை குரோமேட், குரோமியம் சல்பேட், மற்றும் சோடியம் சல்பேட் போன்ற ரசாயனங்களை உற்பத்தி செய்து வந்தது. இந்த நிறுவனம் 1995ஆம் ஆண்டு தன் உற்பத்தியை நிறுத்திவிட்டது. ஆனால், இந்த நிறுவனத்தினால் விளைந்த சுமார் 1.5 லட்சம் டன்கள் குரோமியம் கழிவு அங்கு பெரும் நிலப்பகுதியை ஆக்ரமித்து சுகாதார கேடுகளை விளைவித்து வருகிறது.

நச்சுக் கழிவு கொட்டப்பட்டுள்ள 12 இடங்கள்

இது போன்ற தொழிற்சாலை நச்சுக் கழிவுகள் 12 இடங்களில் கொட்டப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அடையாளம் கண்டுள்ளது.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் 20 ஆண்டுகளாக கவனிப்பாரற்று அபாயம் விளைவிக்கும் குரோமியம் கழிவுகள் 2 முதல் 4 ஹேக்டேர் நிலப்பரப்பில் சுமார் 3 முதல் 5 மீட்டர்கள் உயரத்திற்கு குவிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இதிலிருந்து தோன்றும் மஞ்சள் நிற நச்சுப்பொருள் நிலத்தடி நீருக்குள் ஊடுருவுகிறது.

இந்தக் கழிவுகள் பாதுகாப்பான இடங்களில் கொட்டப்பட்டிருக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

புற்று நோயை உருவாக்கும் குரோமியம்:

வி.ஐ.டி. பல்கலைக் கழக கரியமில வாயு மற்றும் பசுமை தொழில்நுட்ப ஆய்வு மையத்தின் ஆர்.நடராஜன் கூறும் போது, “குரோமியம் ஒரு கன உலோகம். இது புற்று நோயை உருவாக்குவது. இந்த மாவட்டத்தில் சுமார் 30 கிமீ சுற்றுப்பரப்புக்கு நிலத்தடி நீர் நச்சுத்தன்மை கொண்டதாக மாறிவிட்டது என்று ஏற்கெனவே உத்தேசிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலத்தடி நீர் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது, மேலும் இந்த குரோமியம் கழிவை பயனுள்ளதாகவும் மாற்ற முடியும்.”என்றார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாடு இயக்கத்தின் செயலர் அசோகன் கூறும் போது, “மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தினாலும் செயலற்ற தன்மையினாலும் இன்று குடிநீர் நச்சுமயமாகியுள்ளது, மக்கள் அதனை குடித்தும் வருகின்றனர்.”என்றார்.

இந்த குரோமியம் கழிவை எப்படி அகற்றுவது என்பது பற்றி அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x