Published : 02 Feb 2015 09:57 AM
Last Updated : 02 Feb 2015 09:57 AM

சென்னையில் வள்ளலார் வாழ்ந்த வீட்டை நினைவிடமாக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னையில் வள்ளலார் வாழ்ந்த வீட்டை நினைவிடமாக மாற்றும் பணிகளை தமிழக அரசு தொடங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

வள்ளலார் என்றதுமே நினைவுக்கு வருவது வடலூர் சத்தியஞான சபைதான் என்ற போதிலும், அவரது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடம் சென்னை ஏழுகிணறு வீராசாமி தெருவில் உள்ள இல்லம்தான். வள்ளலார் 2 வயது குழந்தையாக இருந்தபோதே அவரது தந்தை காலமாகிவிட்டார். அதன் பின்னர் வள்ளலார் உள்ளிட்ட குழந்தைகளு டன், இந்த வீட்டில்தான் அவரது தாயார் குடியேறினார்.

தமது 51 ஆண்டு கால வாழ்நாளில் 33 ஆண்டுகளை இவ்வீட்டில்தான் வள்ளலார் கழித்தார். திருவருட்பாவின் முதல் 5 திருமுறைகளை இங்குதான் எழுதினார். உருவ வழிபாடு கூடாது என்ற சிந்தனை அவருக்கு ஏற்பட்டதும் இந்த வீட்டில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்புமிக்க இல்லத்தை நினைவிடமாக அறிவிக்க வேண்டும் என்று ராமலிங்க அடிகளாரின் வழிநடப்பவர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்கள்.

சட்டப்பேரவையிலும் இது குறித்து பாமக உறுப்பினர்கள் குரல் எழுப்பியதன் பயனாக கடந்த 2003-ம் ஆண்டில் அப்போதைய அமைச்சர் செ.செம்மலை, வள்ளலார் வாழ்ந்த ஏழுகிணறு இல்லம் நினைவிடம் ஆக்கப்படும் என்று அறிவித்தார். 12 ஆண்டுகள் ஆன நிலையில், இது தொடர்பாக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் சமயங்களைக் கடந்து வள்ளலாரின் நினைவாக எண்ணற்ற பணிகளை செய்துவருகின்றனர். இத்தகைய சிறப்புமிக்கவருக்கு நினைவிடம் அமைத்து பெருமை சேர்க்க கிடைத்த வாய்ப்பை தமிழக அரசு தட்டிக் கழித்து வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

எனவே, 12 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட அறிவிப் புக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், வள்ளலார் முக்தியடைந்த நாளான பிப்ரவரி 3-ம் தேதி அவரது ஏழுகிணறு இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணிகளை தமிழக அரசு தொடங்க வேண்டும். இதுவே வள்ளலாரின் நினைவு நாளில் நாம் அவருக்கு செய்யும் மிகப்பெரிய பெருமையாக இருக்கும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x