Published : 14 Feb 2015 10:40 AM
Last Updated : 14 Feb 2015 10:40 AM

வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் விட மறுப்பு: விவசாயிகள் போராட்ட அறிவிப்பு

சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக விவசாயத்துக்கு தண்ணீர் விட மறுப்பதாகக் கூறும் வீராணம் ஏரி பாசன விவசாயிகள், இதைக் கண்டித்து சிலுவையில் அறையும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் 9600 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது வீராணம் ஏரி. 1465 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட வீராணத்திலிருந்து சுமார் 84 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறு கின்றன. 2004-லிருந்து தினமும் 74 கன அடி தண்ணீர் வீதம் ஆண்டுக்கு பத்து மாதங்கள் குடிநீருக்காக சென்னைக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் சென்னைக்கான குடிநீர் தேவையில் 33 சதவீதம் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், சென்னைக்கு தண்ணீர் வேண்டும் என்பதற்காக தங்களது விவசாயத் தேவைக்கு தண்ணீர் விட மறுப்பதாக வீராணம் விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

இதுகுறித்து வீராணம் ஏரி பாசன விவசாயிகள் சங்க தலைவர் இளங்கீரன் ‘தி இந்து’விடம் கூறிய தாவது: ‘‘சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை தொடங்கியபோது, விவசாயத்துக்குப் போக எஞ்சிய தண்ணீர் தான் சென்னைக்கு என்று சொன்னதால்தான் நாங்கள் ஒத்துக் கொண்டோம். ஆனால், ஜெயலலிதா அறிவித்த திட்டம் என்பதால் இப்போது வீராணம் விவசாயிகளை இரண்டாம் பட்சமாக்கிவிட்டு சென்னைக்கு தண்ணீர் சேமிப்பதிலேயே அதிகாரிகள் குறியாய் இருக்கிறார்கள்.

சம்பா பருவம் முடிந்து உளுந்து பயிர் செய்திருக் கிறோம். இதற்கு இரண்டு முறை தண்ணீர் விட வேண்டும். ஆனால், அதிகாரிகள் தண்ணீர்விட மறுக்கிறார்கள். நாங்கள் மதகைத் திறக்கப் போனால் தண்ணீரை திருடிவிட்டதாக போலீஸில் புகார் செய்வோம் என்று மிரட்டுகிறார்கள். நாங்கள் தண்ணீரை திறக்கக்கூடாது என்பதற்காக 28 மதகுகளுக்கும் கூண்டு அமைத்து பூட்டுப்போட்டு வைத்துள்ளனர்.

ஏற்கெனவே இந்தப் பகுதியில் 500 ஏக்கரில் வெற்றிலைக் கொடிக்கால் இருந்தது. சென்னைக்கு தண்ணீர் போக தொடங்கிய பிறகு அது 100 ஏக்கராக குறைந்து விட்டது. காலப்போக்கில் வீராணம் ஏரியில் எங்களுக்கான உரிமையை முற்றிலுமாக பறித்துவிடுவார்கள் போலிருக் கிறது. வீராணம் விவசாயிகளை இப்படி உயிரோடு கொல்வதை சுட்டிக்காட்டும் விதமாக 16-ம் தேதி பொதுப்பணித் துறை அலுவலகம் எதிரே சிலுவையில் அறையும் போராட்டத்தை நடத்த முடிவு செய்திருக்கிறோம்’’ இவ்வாறு தெரிவித்தார் இளங்கீரன்.

இதுகுறித்து பொதுப்பணித் துறையின் வீராணம் ஏரி உதவி செயற்பொறியாளர் உமாவிடம் கேட்டபோது, “குடி தண்ணீர் தேவைக்குப் போகத்தான் விவசாயத்துக்கு தண்ணீர் எடுக்க வேண்டும் என 2000ல் மத்திய அரசு புதிய கொள்கை முடிவை அறிவித்திருக்கிறது. எனினும் சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்வதால் வீராணம் பாசனத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சம்பா சாகுபடி ஜனவரி 31-ம் தேதியுடன் முடிந்துவிட்டது.

விதைக்கும்போது மட்டும்தான் உளுந்துக்கு தண்ணீர் தேவைப்படும். அதையும் நாங்கள் கொடுத்துவிட்டோம். மதகுகளை கையாள்வதற்கு போதிய பணியாளர்கள் எங்களிடம் இல்லை. அதனால், விவசாயிகள் தங்கள் இஷ்டத்துக்கு தண்ணீரைத் திறந்து வீணடிப்பதுடன் மதகுகளையும் சேதப்படுத்தி விடுகிறார்கள். இதைத் தடுக்கத்தான் கூண்டு அமைத்திருக்கிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x