

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ள ஒன்றரை லட்சம் பேருக்கு விரைவில் கார்டு வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர் நாகை மாலி பேசியதாவது:
ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சியில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை வழங்கி அரசு பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளதா? புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துவிட்டு ஏராளமானோர் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு உடனடியாக புதிய ரேஷன் கார்டு வழங்க வேண்டும்.
அமைச்சர் காமராஜ் (குறுக்கிட்டு): ரேஷன் கார்டு கோரி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் 60 நாளில் வழங்கப்படும். திருமணம் ஆன காரணத்தினாலே புதிய கார்டு வழங்கிவிட முடியாது. ஒரே வீட்டில் இருந்தாலும் தனியாக சமையல் செய்ய வேண்டும்.
கடந்த மூன்றரை ஆண்டுகளில், புதிதாக 10 லட்சத்து 93 ஆயிரத்து 484 பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 401 ரேஷன் கார்டுகள் அச்சிடும் பணி நடந்து வருகிறது. அவை விரைவில் உரியவர்களுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார்.