

தமிழகத்தில் ஜவ்வாது மலை, ஏலகிரி மலை, பாலமலை, பர்கூர் மலை, சேர்வராயன் மலை, போத மலை, சித்தேரி மலை, கல்வராயன் மலை, கொல்லி மலை, பச்சை மலை, பிரான் மலை, செம்மலை, சிறுமலை, கரந்தமலை, அழகர்மலை உள்ளிட்டவை கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகும். 400 மீட்டர் முதல் ஆயிரத்து 600 மீட்டர் வரை உயரம் கொண்ட இந்த மலைத்தொடர் வடகிழக்குப் பருவமழையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த மலைகளில் தலைமுறை தலைமுறையாக வாழும் பூர்வீகப் பழங்குடியின மக்கள் விவசாயம் செய்துவந்த விளைநிலங்கள், இன்று பணமே பிரதானமாகக் கொண்டவர்களின் கைகளுக்கு மாறிவருவதால், மென்மையான சுற்றுச்சூழல் நிறைந்த கிழக்குத் தொடர்ச்சி மலைக் குன்றுகளின் நிலவளமும், நீர்வளமும் சீரழிந்து வருகிறது.
மேலும், இப்பகுதியில் அனுமதிக்கப்படும் சுற்றுலாப் பயணிகளின் நெறிமுறையற்ற பிளாஸ்டிக் பயன்பாட்டால் மிகப்பெரிய அளவில் சூழல் சீர்கேடு ஏற்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு இடம் கொடுக்காமல் இம்மலைத் தொடரைப் பாதுகாக்க அரசு கடுமையான சட்டம் இயற்ற வேண்டுமென சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து தமிழக இயற்கை பாதுகாப்பு சங்கத் தலைவர் வ.சுந்தரராஜு கூறும்போது, “கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் பெரும்பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தாலும் வனச் சட்டம், வன உயிர் பாதுகாப்புச் சட்டம் ஆகியவை இங்குள்ள பாதுகாப்பு காடுகளுக்கு மட்டுமே பொருந்தும். காடுகளைச் சுற்றியுள்ள பிற பகுதிகளை இந்த சட்டங்கள் கட்டுப்படுத்தாது. மலைப் பகுதியில் ஒரு சில இடங்களில் மலை வனப் பாதுகாப்பு சட்டம் அமலில் இருந்தபோதும், அதை செயல்படுத்துவதில் இங்கு வாழும் மக்களிடையே ஒத்துழைப்பு இல்லாததால், மரங்களைப் பாதுகாப்பது சவாலாகவே உள்ளது.
மலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றால் முதலில் மலையைச் சுற்றியுள்ள பகுதிகள் பாதுகாக்கப்படவேண்டும். அதற்கு கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும். ஏற்காடு போன்ற மலைப் பகுதிகளின் சீரழிவுக்கு காபி தோட்டம் காரணமென்றால், கொல்லி மலை, பச்சை மலை பகுதியில் மரவள்ளிக் கிழங்கு போன்ற ஓரின பயிர் சாகுபடியால் ஏற்கெனவே இருக்கும் இயற்கை தாவரங்கள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன” என்றார்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “சூழல் சுற்றுலாத் திட்டத்தின் கீழ், ஏற்காடு, ஏலகிரி, பச்சை மலை, ஒகேனக்கல், அழகர்மலை உட்பட அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாடு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தனியார் வசம் உள்ள காடுகளில் பணப்பயிர் பயிரிடுவதை நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. அடர் வனப்பகுதியில் அத்து மீறல்களுக்கு நாங்கள் அனுமதிப்பதில்லை. பழங்குடியின மக்கள் தங்கள் விவசாய முறையை மாற்றிக்கொள்ள முன்வருவதில்லை. மேலும், சிலர் தங்கள் நிலங்களை மற்றவர்களிடம் ஒப்பந்த அடிப்படையில் விவசாயம் செய்ய வழங்குவதையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அடர் வனப்பகுதிகளைப்போல, அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பாதுகாக்க இப்போது இருப்பதைவிட இன்னும் கடுமையான சட்டம் இயற்றப்படவேண்டும்” என்றார்.