

காட்சி விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கும்படி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி, ஜல்லிக்கட்டை நடத்த சாதகமான ஆணை பெறப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றியபோது, "தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தவும், மகாராஷ்டிராவில் காளைமாட்டுப் பந்தயத்தை நடத்தவும் முழுமையான தடை பிறப்பித்து கடந்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் ஆணை வழங்கப்பட்டது. இது தொடர்பான அனைத்து வழக்குகளும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
மேலும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நெறிமுறை சட்டம் 2009, இந்திய பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்திற்கு முரணாக அமைந்துள்ளதால் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணை ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதை முற்றிலும் தடை செய்து விட்டதால், இதனை எதிர்த்து 19.5.2014 அன்று தமிழ்நாடு அரசால் மறு ஆய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மறு ஆய்வு மனு இன்னமும் நிலுவையில் உள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய நிகழ்ச்சியான ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வழிவகை காணுமாறு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டதோடு, அது குறித்த பல்வேறு நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசும், தமிழக அரசின் உயர் அதிகாரிகளும் கடந்த பல மாதங்களாக எடுத்து வருகின்றனர். மத்திய அரசினை தொடர்பு கொண்டு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கையிலிருந்து காளையை நீக்கம் செய்யத் தொடர் முயற்சிகள் தமிழக அரசால் எடுக்கப்பட்டன.
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அரசு செயலாளர், தலைமையிலான குழு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக அலுவலர்கள் மற்றும் இந்திய அரசு தலைமை வழக்கறிஞருடன் கடந்த 07.01.2015 அன்று கலந்துரையாடல் மேற்கொண்டது.
மேலும், செயலாளர், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை, தமிழ்நாடு தலைமையிலான இக்குழு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக அதிகாரிகளுடன், காளைகளை காட்சி விலங்கு பட்டியலில் இருந்து நீக்கவும், அதன் வாயிலாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் வழக்கம்போலவே இந்த வருடமும் நடத்தப்படவும் மீண்டும், 12.01.2015 மற்றும் 13.01.2015 ஆகிய நாட்களில் இரு சுற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டது.
14.01.2015 அன்று அனுப்பப்பட்ட கடிதத்தில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக 11.07.2011 நாளிட்ட அறிவிக்கை எண்.ஜி.எஸ்.ஆர்.528(ஈ) இல் உள்ள காட்சி விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி, ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் எந்தவித தடையுமின்றி இந்த ஆண்டும் நடக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.
எனினும், மத்திய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கையிலிருந்து காளைகள் நீக்கம் செய்யப்படாததால், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்திட இயலவில்லை.
மத்திய அரசின் அறிவிக்கையிலிருந்து காளைகளை நீக்கும்படி மத்திய அரசை இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும். அந்த அறிவிக்கையிலிருந்து, அவ்வாறு காளைகள் நீக்கப்பட்டபின், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சாதகமான ஆணை உச்ச நீதிமன்றத்தில் பெறப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.