Published : 05 Feb 2015 12:10 PM
Last Updated : 05 Feb 2015 12:10 PM

சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது: ராமதாஸ்

சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி தொடர்ந்து அதே இடத்தில், இப்போதுள்ளவாறே செயல்படும் என்று அரசு அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை சட்டக் கல்லூரியை மையமாக வைத்து கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகளும், அவற்றின் அடிப்படையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதும் மிகவும் கவலையளிக்கின்றன.

போராட்டம் நடத்திய சட்டக் கல்லூரி மாணவர்களுடன் பேச்சு நடத்தி தீர்வு காண்பதற்கு பதிலாக அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி பெருமை மிக்க பாரம்பரியம் கொண்டது. 1891 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இது தான் இந்தியாவின் தொன்மையான சட்டக்கல்லூரி ஆகும். இந்தக் கல்லூரியை இடமாற்றம் செய்யப்போவதாக கடந்த இரு வாரங்களாகவே செவிவழி செய்திகள் வெளியாகி வந்தன.

டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை மூடிவிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கத்திலும், திருவள்ளூரிலும் இரு அரசு சட்டக் கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தமிழ் நாளிதழ் ஒன்றில் நேற்று செய்தி வெளியானது. இதனால் சட்டக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களிடையே கடந்த 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட மோதல் மற்றும் வன்முறை குறித்து விசாரணை நடத்திய நீதிபதி சண்முகம் ஆணையம் பரிந்துரைப்படி தான் பெருமை மிக்க இந்த கல்லூரியை மூடி விட்டு புதிதாக இரு சட்டக் கல்லூரிகளை திறக்க அரசு முடிவெடுத்து இருப்பதாக தமிழ்நாடு சட்டக் கல்வி பணி இயக்கக அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஊடகச் செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.

தமிழக அரசுத் தரப்பில் எவரேனும் இப்படி ஒரு தகவலை கூறியிருந்தால் அது தவறானதாக இருக்க வேண்டும்; அல்லது நீதிபதி சண்முகம் ஆணையப் பரிந்துரைக்கு எதிரானதாக இருக்க வேண்டும்.

ஏனெனில் சட்டக் கல்லூரி வன்முறை தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி சண்முகம் ஆணையம் கடந்த 08.06.2009 அன்று தமிழக அரசிடம் தாக்கல் செய்த அறிக்கையில், ‘‘அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் கற்றுத் தரப்படும் இளநிலை சட்டப்படிப்பை இங்கிருந்து நீக்கி விட்டு சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் 3 புதிய இளநிலை சட்டப்படிப்புக்கான கல்லூரிகளைத் தொடங்க வேண்டும்’’ என்று தான் கூறப்பட்டிருந்தது. இதற்கு மாறாக உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியையே மூட அரசு முடிவு செய்திருந்தால் அது கண்டிக்கத்தக்கது.

வரலாற்று சிறப்பு மிக்க சட்டக்கல்லூரியை மூட வேண்டும் என்ற எண்ணம் கூட தமிழக ஆட்சியாளர்கள் மனதில் எழக்கூடாது. இக்கல்லூரியை இட மாற்றம் செய்ய அரசு நினைத்தால் அதுவும் தவறாகும்.

சென்னை சட்டக் கல்லூரி தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானதுமே, அதுகுறித்த உண்மை நிலையை தமிழக அரசு விளக்கியிருக்க வேண்டும். மாறாக ஊடக செய்திகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அரசின் செயல்பாடுகள் அமைந்திருந்ததால் தான் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து தடியடி நடத்தும் நிலை உருவானது.

சட்டக்கல்லூரியை மாற்றுவதை எதிர்த்து இன்றும் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் பிற நகரங்களிலும் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராடி வருகின்றனர். போராட்டம் நீடித்தால் சட்டம் -ஒழுங்கு பிரச்சினை உருவாகக்கூடும்.

எனவே, சட்டக் கல்லூரி பிரச்சினை குறித்து தமிழக அரசு உடனடியாக விளக்கமளிக்க வேண்டும்.

சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்கப்பட்டாலும் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி தொடர்ந்து அதே இடத்தில், இப்போதுள்ளவாறே செயல்படும் என்று அரசு அறிவிக்க வேண்டும். அதன்மூலம் மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x