ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஜப்தி நடவடிக்கையால் பரபரப்பு

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஜப்தி நடவடிக்கையால் பரபரப்பு
Updated on
1 min read

திருப்போரூரை அடுத்த தண்டரை ஊராட்சியில், குடிநீர் திட்ட பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரருக்கு, வட்டியுடன் கூடிய நிதியை வழங்கக் கோரி நீதிமன்ற உத்தரவிட்டும் நிதி வழங்கப்படாததால், நீதிமன்ற பணியாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொருட்களை ஜப்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.

வட்டார வளர்ச்சி அலுவலர் அளித்த உறுதியின்பேரில் ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், திருப் போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தண்டரை ஊராட்சியில், கடந்த 2006-ம் ஆண்டு ஆழ்துளை கிண றுடன் கூடிய குழாய் அமைக்கும் பணியை ரூ.20.1 ஆயிரம் செலவில் ஒப்பந்ததாரர் ஏழுமலை மேற்கொண்டார். ஆனால், பணிகள் முடிந்தும் ஊராட்சி நிர்வாகம் ஒப்பந்ததாரருக்கு பணிக்கான நிதியை வழங்கவில்லை.

இதனால், ஏழுமலை இதுதொடர்பாக செங்கல்பட்டில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் திட்ட பணிக்கான ரூ. 21,500 மற்றும் தாமதப்படுத்தப்பட்ட நாட்களுக்கான வட்டியாக ரூ.10,830 தொகையையும் சேர்த்து, 10 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி திருப்போரூர் ஒன்றிய நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு தீர்ப்பளித்தது.

ஆனால், 10 நாட்கள் கடந்த பின்னும் ஒன்றிய நிர்வாகம் நீதிமன்றம் உத்தரவிட்ட தொகையை வழங்காததால், நீதிமன்றப் பணியாளர்கள் திருப் போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள அசை யும் பொருட்களை ஜப்தி செய்வதற்கான நடவடிக்கைளை நேற்று மேற்கொண்டனர்.

இதனால், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் நீதி மன்ற பணியாளர்களிடம் 10 நாட்களுக்குள், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் இருந்து தொகையைப் பெற்று தருவதாக உறுதி அளித்தார்.

இதை தொடர்ந்து, ஜப்தி நடவடிக்கையை நீதிமன்றப் பணியாளர்கள் தற்காலிகமாக நிறுத்துவதாக கூறி அங்கிருந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in