Last Updated : 20 Feb, 2015 10:28 AM

 

Published : 20 Feb 2015 10:28 AM
Last Updated : 20 Feb 2015 10:28 AM

மீறப்படும் விதிமுறைகள்: சென்னை விமான நிலையத்தில் பறவைகள் குறுக்கிடும் ஆபத்து

சென்னை விமான நிலையத்தில் பறவைகளை விரட்டுவதற்காக நேற்று முன் தினம் பட்டாசுகளை வெடித்த போது ஓடுபாதை அருகே உள்ள புல்லில் தீப்பிடித்தது. இதனால், அப்போது வந்த டெல்லி பயணிகள் விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.

விமான ஓடுபாதை அருகே பறவை கள் வரும் சம்பவங்கள் சென்னை விமான நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தகவலின்படி கடந்த 2012-ம் ஆண்டில் 38 முறையும், 2013-ம் ஆண்டில் 50 முறையும் பறவைகள் விமானங்களின் மீது மோதுவது மாதிரியான சூழல் உருவானது. பறவைகள் அதிகளவில் வருவதற்கு விமான நிலையத்தின் சுற்றுப்புற பகுதிகளில் ஆக்கிரமிப்புகளும், இறைச்சிக் கடைகளும் அதிகளவில் உள்ளதே காரணமாகும் எனக் கூறப்படுகிறது.

விமான நிலையங்களை சுற்றி பறவைகள் பறப்பதை கட்டுப்படுத்த தேசிய பறவைகள் கட்டுப்பாட்டு ஆணையம் இயங்கி வருகிறது. இந்த ஆணையம் வரையறுத்துள்ள விதிமுறைகளின்படி விமான நிலையத்தின் 10 கி.மீ. சுற்றளவுக்கு பறவைகள் வருவதற்கான சுற்றுச்சூழல் தடுக்கப்பட வேண்டும். முக்கியமாக மீன் மற்றும் இறைச்சிக் கடைகள், ஓட்டல்கள், மதுபானக் கடைகள், ஆக்கிரமிப்புகள், குப்பை மேடுகள் இருக்கக் கூடாது. விமானப் போக்குவரத்துத் துறை கூடுதல் அல்லது இணை இயக்குநரின் எழுத்துப்பூர்வ ஒப்புதலுக்கு பின்னரே கடைகள் வைக்கலாம். இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யலாம். சென்னை விமான நிலையத்தில் பறவைகள் வருவதற்கு இந்த விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

விமான நிலையத்து எதிரில் ஜி.எஸ்.டி சாலைக்கு அருகே கருவேலம் காடுகள் உள்ளன. இங்கு சில உயிரினங்களும் கால்நடைகளும் இறந்து கிடப்பதாலும் பறவைகள் அதிகம் வருகின்றன.

இது தொடர்பாக சென்னை விமான நிலைய இயக்குநர் தீபக் சாஸ்திரி ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் கோடை காலத்தில் பறவைகள் வரத்து அதிகம் இருக்கும். எனவே பறவைகளை விரட்ட பட்டாசு களை வெடித்து வருகிறோம். உலகம் முழுவதும் இதே நடைமுறைதான் உள்ளது. இப்படி பட்டாசு வெடிக்கையில் ஓடுபாதை அருகேயுள்ள புல்லில் தீப்பிடித்தது. இதுவும் நடக்கக்கூடிய ஒன்றுதான் என்பதால் எப்போதும் முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு ஊழியர்களை தயார் நிலையில் வைத்துள்ளோம்.

விமான நிலையம் அருகே உள்ள அடையாறு ஆற்றை சுத்தம் செய்ய வேண்டும், ஆக்கிரமிப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், குப்பைகளை கட்டுப்படுத்த வேண்டும், மாநில காவல்துறை உரிய ஒத்துழைப்பு தர வேண்டும் என பல கோரிக்கைகளை மாநில அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். இவற்றை சரி செய்வதாக உறுதியளித்துள்ளனர்.

மேலும் விமானப் போக்குவரத்துத் துறையின் அறிவுறுத்தலின்படி விமான நிலையம் அருகே கறிக்கடைகள், ஆக்கிரமிப்புகள் போன்றவற்றை தீவிரமாக கண்காணித்து கட்டுப்படுத்தி வருகிறோம். விமான தள அமலாக்க மேலாண்மை ஆணையமும் இந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆணையத்தின் கூட்டம் 6 மாதத்துக்கு ஒரு முறை நடக்கும். இதனால் கடந்த ஓராண்டு காலமாக சென்னை விமான நிலையத்தில் பறவைகள் தொல்லை பெரியளவில் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.மீனம்பாக்கம் பேரூராட்சி சில ஆண்டுகள் முன்பு சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. குப்பை அகற்றும் பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, “விமான நிலைய பகுதி என்பதால் மீனம்பாக்கத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்து குப்பைகளை சுத்தம் செய்து வருகிறோம். மேலும் தேவையற்ற ஆக்கிரமிப்புகள், விதிமீறல்கள் பற்றி புகார்கள் வந்தால் அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x