Last Updated : 20 Feb, 2015 10:57 AM

 

Published : 20 Feb 2015 10:57 AM
Last Updated : 20 Feb 2015 10:57 AM

வேளாண் துறையை மேம்படுத்த நிபுணர் குழு: விவசாயிகளுக்கு மண் வள அட்டை திட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

வேளாண் துறையின் வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்காக குறைந்த பட்ச பொது செயல்திட்டத்தை அமல்படுத்தும் விதத்தில் நிபுணர் குழுக்களை, நிதி ஆயோக் மற்றும் மாநில அரசுகள் அமைக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் சமச்சீரான உரங்களைப் பயன்படுத்தும் வகை யில் 14 கோடி விவசாயிகளுக்கு 3 ஆண்டுகளுக்குள் மண் வள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் முதல்வர் மோடி பேசியதாவது:

வேளாண்துறையை ஊக்குவிக்க, நாடு முழுவதும் அமல்படுத்தத்தக்க குறைந்தபட்ச செயல்திட்டத்தை மாநில அரசுகள் கண்டறிய வேண்டும்.

வேளாண்துறை சார்ந்த அதிக அதிகாரம் பெற்ற நிபுணர் குழுவை அமைக்க நிதி ஆயோக் மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது அடி முதல் நுனிவரை பயன்படுத்தப்படும் அம்சமாக இருக்கும். முதலில், மாநில அரசுகள் வேளாண் துறை சார்ந்த கொள்கைகளை உருவாக்கும். பின்னர், மாநில அரசுகளுடன் கலந்தாய்வு செய்து, மத்திய அரசு கொள்கையைக் கொண்டுவரும். இதற்கான நடைமுறைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.

மகசூலை அதிகரிக்க மரபுசார்ந்த சாகுபடி முறைகளைக் கைவிட்டு, அறிவியல் சார்ந்த முறைகளைப் பின்பற்ற விவசாயிகள் முன்வர வேண்டும். வேளாண்முறை மண்ணின் தன்மை சார்ந்ததாக இருக்க வேண்டும்.

மண் பரிசோதனை முக்கியமானது. விவசாயிகள் மண்ணின் வளம் குறித்து அறிந்து கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உற்பத்தித் திறனை அதிகரிக்க அதுவே சிறந்தது.

அறிவியல் முறைப்படி மண் பரிசோதனை செய்து, அதன் அடிப்படையில் முடிவெடுத்தால் விவசாயிகள் ரூ.50,000 வரை மிச்சப்படுத்த முடியும். மண்பரி சோதனையை வழக்கமான நடைமுறையாக மாற்ற வேண்டும். சிறு நகரங்களில் கூட மண் பரிசோதனை ஆய்வகங் களை அமைக்க தொழில்முனை வோர்கள் முன்வர வேண்டும். பள்ளி விடுமுறை நாட்களில் அங்குள்ள ஆய்வுக் கூடங்களை மண் பரிசோதனை செய்வதற்கு பயன்படுத்தலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மண் வள அட்டை, அந்த மண்ணின் தன்மைக்கு ஏற்ப, குறிப்பிட்ட பயிருக்குத் தேவைப் படும் உரத்தின் அளவை விவசாயிக்கு பரிந்துரைக்கும். இதனால், உரத்தை தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x