

நாட்டிலேயே முதன்முறையாக ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி யில் நேற்று நடைபெற்ற இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நில வரத்தை கண்காணிக்க வாக்குச் சாவடிகளுக்கு வழங்கப்பட்ட கையடக்க கணினிகள்(டேப்லெட் பி.சி.) எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்கின்றனர் தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள்.
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பணி யாற்றிய தலைமை அலுவலர் களுக்கு தலா ஒரு கையடக்க கணினி வழங்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு நிமிடமும் வாக்குப் பதிவு நிலவரத்தை கண்காணிக் கவும், வாக்களிக்க வரிசையில் காத்திருப்போரின் எண்ணிக்கை யைப் பதிவு செய்யவும் இந்த கணினிகளை தேர்தல் ஆணையம் வழங்கியிருந்தது.
மேலும், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்காளர்கள் வாக் களிக்க வரும்பொழுது புகைப்படத் துடன் கூடிய வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், ஆதார் அட்டை, அஞ்சலக அட்டை உள்ளிட்ட எந்த வகையான ஆவணத்தைப் பயன்படுத்தி வாக்களிக்கிறார்கள் என்பதை அறியவும், வாக்குப்பதிவு சதவீதத்தை இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோர் அறிந்துகொள்ளவும் நாட்டிலேயே முதல் முறையாக இந்த தேர்தலில் சோதனை முயற்சியாக இந்த கையடக்க கணினி பயன்படுத்தப்பட்டது.
ஆனால், இந்த கையடக்க கணினியை இயக்க போதுமான பயிற்சிகள் அளிக்கப்படாததால் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் இதை முறையாகப் பயன்படுத்தி, தகவல்களை அனுப்ப இயலாமல் பெரும் சிரமத்துக்குள்ளாயினர். இதனால், பல வாக்குச்சாவடிகளின் வாக்குப்பதிவு சதவீதத்தை அறிந்துகொள்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு, தொலைபேசி வழியாகவே இந்த தகவல்களை தேர்தல் அலுவலர்கள் பெற்றனர்.
இதுதொடர்பாக வாக்குச்சாவடி தலைமை அலுவலர் ஒருவர் கூறியபோது, “தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு 3 கட்டங்களாக பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அப்போதே இந்த கையடக்க கணினியைப் பயன்படுத்துவது தொடர்பாகவும் உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டிருந்தால், அதை சிறப்பாகப் பயன்படுத்தியிருக்க முடியும். ஆனால், வாக்குப்பதி வுக்கு முதல் நாள்தான் இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. எனவே, இதில் ஏற்பட்ட சந்தேகங்களை தீர்க்க முடியவில்லை” என்றார்.
கையடக்க கணினியை இயக்கிப் பழக்கமில்லாததால், பல வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் வெப்கேமரா மூலம் வாக்குப்பதிவை பதிவு செய்த பணியாளர்களிடம் அவற்றை அளித்து, அதை இயக்கச் செய்தனர். சில வாக்குச்சாவடிகளில் சிறப்பாக செயல்பட்ட இந்த கையடக்க கணினி, சில இடங்களில் போதிய அளவுக்கு சிக்னல் (நெட்வொர்க்) இல்லாததால் சரியாக செயல்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
முறையாக, முன்கூட்டியே உரிய பயிற்சிகளை அளித்திருந்தால், நாட்டிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கையடக்க கணினியின் நோக்கம் முழுமையாக நிறைவேறியிருக்கும் என்பதுதான் உண்மை.