

திருநெல்வேலி அருகே ராமையன்பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளிக்கு சாம்பல் புதனையொட்டி விடுமுறை என்று கூறி பள்ளி நிர்வாகி பூட்டுபோட்டதால், நேற்று வீதியில் ஆசிரியர்கள் வகுப்பு நடத்தினர்.
ராமையன்பட்டியிலுள்ள அரசு உதவிபெறும் இப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்புவரை ஒரு பிரிவாகவும், 6 முதல் 10-ம் வகுப்புவரை ஒரு பிரிவாகவும் செயல்பட்டு வருகிறது. 6 முதல் 10 வரை உள்ள வகுப்புகளில் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 15 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாக பள்ளி நிர்வாகத்துக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. இப்பள்ளி கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் மாவட்ட கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
நேற்று காலையில் வழக்கம்போல் மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்தபோது பள்ளியின் பிரதான வாயிற்கதவு பூட்டப்பட்டிருந்தது. `சாம்பல் புதனை முன்னிட்டு பள்ளிக்கு விடுமுறை’ என்று அதில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
இது குறித்து முன்கூட்டியே தெரிவிக்காததால் பள்ளிக்கு வந்த ஆசிரியர்களும், மாணவ, மாணவியரும் ஏமாற்றம் அடைந்தனர். இதுபற்றி விவரம் கேட்க பள்ளி நிர்வாகியை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இதையடுத்து ஆசிரியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தனர். பள்ளிக்கு வெளியே வீதியில் சாமியானா பந்தல் அமைக்க ஏற்பாடு செய்தனர். பின்னர் மாணவ, மாணவிகளை வீதியில் அமர வைத்து பாடம் நடத்தினர்.
மானூர் போலீஸாருக்கும், கல்வித்துறைக்கும் தகவல் கிடைத்தது. மாணவர்களின் பெற்றோரும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இன்று கல்வித்துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.