Published : 11 Feb 2015 11:15 AM
Last Updated : 11 Feb 2015 11:15 AM

தமிழகத்தின் வளர்ச்சிக்காக அதிமுக எம்.பி.க்கள் செய்தது என்ன? - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்துக்கான 22 ரயில் திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்படாததால் அவை முடக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ரூ.19 ஆயிரத்து 500 கோடி செலவில் நிறைவேற்றப் படவிருந்த 160 திட்டங்களை மத்திய ரயில்வே அமைச்சகம் ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் இணக்கமற்ற சூழலே காரணமாகும்.

சென்னை - நெல்லை இரட்டை ரயில், சென்னை தூத்துக்குடி இடையே சிறப்பு சரக்கு ரயில் போக்குவரத்து, சென்னை மதுரை கன்னியாகுமரி மற்றும் மதுரை கோவை இடையே அதிவிரைவு ரயில் போக்குவரத்து, சென்னை மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களை புரிந்துணர்வின் மூலம் நிறைவேற்றத் தயார் என்று கடிதம் எழுதும் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு, ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவதில் என்ன தயக்கம் உள்ளது.

ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றப் படாததற்கு நிலம் கையகப்படுத்துவதில் நிலவும் தாமதம், நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் உள்ள சிக்கல் போன்ற காரணங்களை முதல்வர் அறிவாரா? கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களில் ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு ஒதுக்கிய நிதியுடன் அந்த மாநில அரசுகளும் தங்களது பங்களிப்பை அளிக்கின்றன.

அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 37 எம்.பி.க்கள், தமிழக வளர்ச்சிக்காக என்ன செய்கிறார்கள். மத்திய நிதியமைச்சரையோ, ரயில்வே அமைச்சரையோ இவர்கள் சந்தித்த துண்டா? மெட்ரோ ரயில் திட்டத்துக்காக முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு ரூ.14 ஆயிரத்து 400 கோடி நிதி ஒதுக்கியது. இத்திட்டம் கோயம்பேடு ஆலந்தூர் வரை நிறைவு பெற்றுள்ளது. இந்த சேவையை தொடங்கும் தேதியை தமிழக அரசு இன்னும் நிர்ணயிக்கவில்லை. இவ்வாறு அறிக்கையில் இளங்கோவன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x