

பங்காரு அடிகளாரின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு மேல்மருவத்தூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று தொடங்கியது. பிப்.23-ம் தேதி வரை இம்முகாம் நடக்கவுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
பங்காரு அடிகளாரின் பவள விழாவை முன்னிட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையும், காஞ்சிபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கமும் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று தொடங்கியது.
முகாமை பங்காரு அடிகளார் தொடங்கிவைத்தார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத் தலைவர் கோ.ப.செந்தில்குமார், ஆதிபரா சக்தி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சக்தி கோ.ப.செந்தில்குமார், பல் மருத்துவக் கல்லூரியின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் தி.ரமேஷ், மருத்துவமனை இயக்குநர் டாக்டர் லேகா செந்தில்குமார் கலந்துகொண்டனர்.
மேல்மருவத்தூரை சுற்றியுள்ள 750-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு கண் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இலவசமாக கண் புரை அறுவை சிகிச்சை செய்து கண் விழி லென்ஸ் பொருத்தி, கண்ணாடி வழங்கப்படவுள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.