

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தாய், மகள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள சின்ன சோழியம்பாக்கத்தில் கடந்த 2-ம் தேதி நள்ளிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய்- மகளான லட்சுமி (50), நிரோஷா (24) ஆகிய இருவரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். முன்விரோதம் காரணமாக நிகழ்த்தப்பட்ட இந்தப் படுகொலை தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கொலையைக் கண்டித்தும், அண்மைக் காலமாக கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் பெண்கள் மீது தாக்குதல், நகை பறிப்பு உள்ளிட்ட சமூகவிரோதச் செயல்கள் அடிக்கடி நடைபெற்று வருவதாகக் கூறி, அதைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி பஸ் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க திருவள்ளூர் மாவட்டத் தலைவர் கீதா, செயலர் மோகனா, பொருளாளர் சாந்தி, கும்மிடிப்பூண்டி ஒன்றியச் செயலர் நல்லம்மா சுபேதா உட்பட திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
தாய், மகள் கொலைக் குற்றவாளிகள் மீது உரிய வழக்கு பதிவு செய்து, அதிகபட்ச தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். கும்மிடிப்பூண்டி பகுதியில் அடிக்கடி பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், வழிப்பறி ஆகியவற்றைத் தடுக்க போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.