

2 ஆண்டுகளுக்கும் மேலாக நகராட்சிக்கு வரி செலுத்தாத வணிகர்களின் கடை முன்பாக குப்பைத்தொட்டிகளை வைத்து வரி வசூலிக்கும் நூதன நடவடிக்கையில் புதுக்கோட்டை நகராட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை நகராட்சியில் குடிநீர் வரி, சொத்துவரி, தொழில் வரி, வாடகை உள்ளிட்ட பல்வேறு இனங்களில் வரி செலுத்தப்படாமல் ரூ. 8 கோடி நிலுவை உள்ளது. இதை வசூலிக்க நகராட்சி நிர்வாகத்தினர் துண்டறிக்கை, ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்து வசூலித்து வருகின்றனர்.
எனினும், கடந்த 2 ஆண்டுகளாக வரி செலுத்தாமல் இழுத்தடிப்போரிடம் இருந்து வரியை வசூலிக்க அவர்களது கடை வாசலில் உடைந்த பெரிய அளவிலான தொட்டிகளை நகராட்சி பணியாளர்கள் வைத்து வருகின்றனர்.
இது குறித்து வணிகர் ஒருவர் கூறும்போது, “எனது கடை வாசலில் இருந்த குப்பைத் தொட்டியை அகற்றுமாறு நகராட்சிக்கு தெரிவித்தேன். அப்போது, வரி செலுத்தாததால் வாசலில் குப்பைத்தொட்டி வைத்துள்ளோம். வரி செலுத்தியதும் அகற்றிக்கொள்கிறோம் என்றனர். உடனே வரியை செலுத்திவிட்டேன்” என்றார்.
இதுகுறித்து நகராட்சி அலுவலர்கள் கூறும்போது, “புதுக்கோட்டை நகரில் உள்ள 18 ஆயிரம் வணிக நிறுவனங்களில் 10 சதவீத நிறுவனங்களைச் சேர்ந்தோர் வரி செலுத்தவில்லை. 100 சதவீதம் வரி வசூல் செய்ய வேண்டும் என்பதால் வரி பாக்கி வைத்திருந்த பல கடைகளை பூட்டி சீல் வைத்தோம், ஜப்தி செய்தோம். எனினும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.
எனவே, தொடர்ந்து 2 ஆண்டுகள் வரி செலுத்தாத நிறுவனங்கள் முன்பாக குப்பைத் தொட்டிகளை வைத்து வருகிறோம். இது நல்ல பலனைக்கொடுக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றனர்.