

ராணிப்பேட்டை அருகே 10 தொழிலாளர்கள் பலியான சிப்காட் வளாகத்தில் பரவியுள்ள அபாயகரமான தோல் கழிவுகளை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உதவியுடன் அகற்றும் பணி நேற்று தொடங்கியது. விபத்துக்கு காரணமான பொது சுத்திகரிப்பு நிலையம் மற் றும் அதன் உறுப்பு தொழிற்சாலை களின் மின் இணைப்பு துண்டிக் கப்பட்டு, மூடப்பட்டன.
ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் ‘சிட்கோ தோல் கழிவு பொது சுத்திகரிப்பு நிலையம்’ உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் 86 தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பொது சுத்திகரிப்பு நிலையத்துக்கு சொந்தமான தோல் கழிவுகளை கொட்டி வைக்கப்படும் தொட்டி, வெள்ளிக்கிழமை நள்ளிரவு உடைந்தது.
அதிலிருந்து வெளியேறிய கழிவுகள் அருகில் இருந்த தனியார் தோல் தொழிற்சாலையின் சுற்றுச் சுவரை உடைத்துக்கொண்டு வெள்ளம் போல பாய்ந்து சென்றது. இந்த விபத்தில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்த 10 தொழிலாளர்கள் இறந்தனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படை
இந்த விபத்தில் சுமார் 80 ஆயிரம் கன அடி அளவுக்கு, அபாயகரமான குரோமிய கழிவுகள் அந்த பகுதியில் பரவியிருந்தது. தோல் கழிவில் இருந்து நச்சுத்தன்மையுள்ள ‘ஹைட்ரஜன் சல்பைடு’ மற்றும் ‘மீத்தேன்’வாயு பரவும் அபாயம் ஏற்பட்டது. இதை பாதுகாப்பாக அகற்ற அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை உதவி கோரப்பட்டது.
அதன்படி, டீம் கமாண்டர் பல்வீந்தர் சிங், துணை கமாண்டர் கிருஷ்ணகுமார் மேற்பார்வையில் 43 பேர் கொண்ட குழுவினர் சிப்காட் வளாகத்துக்கு விரைந்தனர். ராணிப்பேட்டை கோட்டாட்சியர் பிரியதர்ஷினி மேற்பார்வையில் நடந்த கூட்டத்தில், கழிவுகளை அகற்றி தோல் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள 4 தொட்டிகளில் கொட்டவும், தற்காலிகமாக மண்ணில் குழி தோண்டி பாதுகாப்பாக கொட்டி வைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.நந்தகோபால் ஒப்புதல் அளித்துள்ளார்.
தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கூறும்போது, ‘‘சிப்காட் வளாகத்தில் பரவியுள்ள தோல் கழிவுகளை அகற்ற 2 நாட்கள் ஆகும். கழிவுகளை அகற்றும் பணியில் உள்ளவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டால் மீட்புப் பணியில் தயார் நிலையில் இருப்போம். ஒரு பக்கம் கெட்டியாக இருக்கும் கழிவு பொக்லைன் மூலம் அகற்றப்படும். மறுபக்கம் தண்ணீராக இருக்கும் கழிவுகள் வாக்யூம் இயந்திரங்கள் உதவியுடன் உறிஞ்சி எடுக்கப்படும்’’ என்றனர்.
தொழிற்சாலைகளை மூட உத்தரவு
மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘‘10 பேர் பலியான விபத்துக்கு காரணமான சிட்கோ தோல் கழிவு சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் மூட உத்தரவிட்டு, தொழிற்சாலை களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது’’ என்றனர்.