Published : 09 Feb 2015 03:22 PM
Last Updated : 09 Feb 2015 03:22 PM

முன்பதிவு பெட்டியில் சாதாரண பயணச்சீட்டு பெற்றவர்கள் பயணம்: பயணிக்கு ரூ.21 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் - தெற்கு ரயில்வேக்கு நுகர்வோர் மன்றம் உத்தரவு

முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியில் சாதாரண பயணச் சீட்டு பெற்றவர்களை பயணம் செய்ய அனுமதித்தது தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.21 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று தெற்கு ரயில்வேக்கு நுகர்வோர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை ஈக்காட்டு தாங்கல் பகுதியை சேர்ந்த சேதுராமன் என்பவர் சென்னை (வடக்கு) மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறிருந்ததாவது:

நான் என்னுடைய குடும்பத்தினருடன் அகமதாபாத் செல்வதற்காக கடந்த 24.12.2012 அன்று முன் பதிவு பயணச்சீட்டு எடுத்திருந்தேன். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அகமதாபாத் செல்லும் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் என்னுடைய குடும்பத்தினர் ஏழு பேருக்கு இருக்கை ஒதுக்கப் பட்டு இருந்தது. ஆனால் பயணத்தின் போது முன்பதிவு பெட்டியில் முன்பதிவு பயணச்சீட்டு பெறாதவர்களும் பயணம் செய்தனர்.இந்த புகாரை பயணச்சீட்டு கண்காணிப்பு அதிகாரியிடம்(டிடிஆர்) தெரிவிக்க முடிவு செய்தோம். ஆனால் டிடிஆர் வரவில்லை.

இதனால் பெரும் சிரமம் ஏற்பட் டது. 72 பேர் பயணம் செய்ய வேண்டிய முன்பதிவு பெட்டியில் சுமார் 172 பேர் பயணம் செய்தார்கள். தெற்கு ரயில்வேயின் சேவை குறைபாடே இதற்கு காரணம்.

ஆகவே, முன்பதிவு பயணச் சீட்டுக்கு நாங்கள் கூடுதலாக செலுத்திய ரூ.1,271 தொகையை 10 சதவீத வட்டியுடன் திருப்பித் தர வேண்டும். அதேபோல் சேவை குறைபாட்டுக்கு ரூ.77 ஆயிரத்தை 7 சதவீத வட்டியுடன் இழப்பீடாக வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

தெற்கு ரயில்வே சார்பில் எழுத்து மூலமாக தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், “பயணிகள் ரயிலில் பயணச்சீட்டு சரிபார்ப்பு அதிகாரி டிக்கெட்டுகளை சரிபார்ப்பதும், முறையான டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோரைத் தடுப்பதும் ரயில்வே துறையின் சொந்த சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதாகும். பயணச்சீட்டு சரிபார்ப்பு அதிகாரி பயணிகளுடைய டிக்கெட்டுகளில் கையெழுத்து போடுவது நிர்வாக காரணத்துக்காகத்தானே தவிர அது ஒரு சேவை அல்ல. ஆதலால் புகார்தாரர் டிடிஆர் வர வில்லை என்பதை குற்றமாக சொல்லியிருப்பதை புகாராக எடுத்துக்கொள்ள கூடாது” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கை சென்னை(வடக்கு ) மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் தலைவர் ஜெயபாலன், உறுப்பினர் கலையரசி ஆகியோர் விசாரணை செய்து கடந்த மாதம் 9-ம் தேதி வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

புகார்தாரர் சேதுராமன் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து தெற்கு ரயில்வேயிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் இது தொடர்பாக ரயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இது சம்பந்தமாக மன்றத்தில் அளிக்கப்பட்ட சாட்சியத்தின்படி தெற்கு ரயில்வே நிர்வாகத்தினர் சேவை குறைபாடு செய்துள்ளனர் என தெரியவருகிறது.

இதன் காரணமாக பயணி சேதுராமனுக்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் ரூ.21 ஆயிரத்தை இழப்பீடாகவும், வழக்கு செலவாக ரூ. 3 ஆயிரமும் வழங்க வேண்டும். அதேபோல் சாதாரண பயணச்சீட்டு கட்டணத்தைவிட முன்பதிவு பயணச்சீட்டுக்காக கூடுதலாக செலுத்திய ரூ.1,271-யை 9 சதவீத வட்டியுடன் தரவேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x