Published : 27 Feb 2015 10:54 AM
Last Updated : 27 Feb 2015 10:54 AM

4 பேரை திருமணம் செய்து நகை, பணம் ஏமாற்றிவிட்டு 5-வது திருமணத்துக்கு முயன்ற பெண் கைது

நான்கு பேரை மயக்கி ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு, ஐந்தாவது திருமணம் செய்ய முயற்சி செய்த ‘கல்யாண ராணி’யை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை முகப்பேர் கிழக்கு டிவிஎஸ் அவென்யூவை சேர்ந்தவர் சீனிவாசன் (38). வீடு, அலுவலகங்களில் உள் அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த நவம்பர் மாதம் மணமகன் தேவை என்ற விளம்பரத்தை இணையதளத்தில் பார்த்துள்ளார். அதில் மணமகளின் பெயர், கோவையை சேர்ந்த காயத்ரி (30), பிஎஸ்சி பட்டதாரி என்று குறிப்பிட்டு இருந்தது.

உடனே விளம்பரத்தில் இருந்த செல் எண்ணில் காயத்ரியை தொடர்பு கொண்டு சீனிவாசன் பேசியுள்ளார். பின்னர் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின் காயத்ரியின் நடவடிக்கையில் சீனிவாசனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன்பு காயத்ரியின் செல்போனை எடுத்து பார்த்தபோது, அதில் ஏராளமான ஆண்களின் எண்கள் இருந்தன. அந்த நம்பர்களுக்கு தொடர்பு கொண்டு பேசியபோது, காயத்ரிக்கு ஏற்கெனவே பல திருமணங்கள் நடந்திருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக சீனிவாசன் திருமங்கலத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி போலீசார் காயத்ரியை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் பரபரப்பு தகவல்

காயத்ரிக்கு கடந்த 2010-ம் ஆண்டில் தி.நகரை சேர்ந்த தொழில் அதிபர் நரசிம்மராவ் (40), என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. அடுத்த சில தினங்களில், அவரை ஏமாற்றி நகை, பணம் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு பிரிந்து சென்றார். பின்னர் 2012-ல் திருச்சியை சேர்ந்த தொழில் அதிபர் ரவிக்குமார்(35), என்பவரை திருமணம் செய்துள்ளார். அவரிடம் இருந்து காயத்ரி விவாகரத்து பெற்றுள்ளார். அடுத்ததாக 2013-ம் ஆண்டில் மாம்பலத்தை சேர்ந்த ராஜகோபால் (33) என்பவருடன் திருமணம் நடந்திருக்கிறது. அவரிடம் இருந்தும் காயத்ரி பிரிந்து சென்றுள்ளார். அடுத்ததாக சீனிவாசனை திருமணம் செய்துள்ளார்.

திருமணம் முடிந்த பிறகு, கணவன்களிடம் நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். அதனால் எனக்கு பணம் வேண்டும் என்று கூறி, அவர்களிடம் இருந்து நகை, பணம் ஆகியவற்றை பெற்றுள்ளார். முக்கியமாக சீனிவாசனை திருமணம் செய்து கொண்ட பிறகு, அம்பத்தூரை சேர்ந்த பாலாஜி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பாலாஜிக்கும், காயத்ரிக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து காயத்ரியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் காயத்ரி குறித்த உண்மையை பாலாஜியின் குடும்பத்துக்கு போலீசார் தெரிவித்தனர். இதனைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x