Published : 02 Feb 2015 10:37 AM
Last Updated : 02 Feb 2015 10:37 AM

தருமபுரி காலபைரவர் கோயில் கும்பாபிஷேக விழாவில் 15 பெண்களிடம் 50 பவுன் நகை பறிப்பு

தருமபுரியில் நேற்று நடந்த காலபைரவர் கோயில் கும்பாபிஷேக விழாவில், 15-க்கும் மேற்பட்ட பெண் பக்தர்களிடம், தாலி உட்பட 50 பவுனுக்கும் அதிகமான தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி அதியமான்கோட்டையில் பழமையான ஸ்ரீ தஷிணகாசி காலபைரவர் சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் தேய்பிறை அஷ்டமி தினத்தில் சுவாமிக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்பர். இங்கு சாம்பல் பூசணியில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று காலபைரவர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் ஆகம ஆசிரியர் ஈசான சுந்தர மூர்த்தி சிவாச்சாரியார், கோயில் அர்ச்சகர் கிருபாகரன் குருக்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, கால பைரவருக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. விழாவில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன், காவல் கண்காணிப்பாளர் லோகநாதன், அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் சுமார் 60 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர். கோபுர கலசத்துக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் கலசத்தை நோக்கி வணங்கி வழிபட்டனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் சிலர், பெண்கள் அணிந்திருந்த தாலி உள்ளிட்ட தங்க நகைகளைப் பறித்துள்ளனர். வழிபாடு முடிந்து நகை பறிபோனதை அறிந்த பெண்கள் கோயில் வளாகத்தில் கதறி அழுதனர்.

இதில், தருமபுரி நெடுமாறன் நகரைச் சேர்ந்த சகுந்தலா என்பவரின் 5.5 பவுன் தங்க நகை, மாரண்டஅள்ளியைச் சேர்ந்த சித்ரா என்பவரின் 5 பவுன், கவளைக்காரன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சபதம் என்பவரது 3 பவுன் உட்பட 15-க்கும் மேற்பட்ட பெண்களிடம் மர்ம நபர்கள் திருடியுள்ளனர். 50 பவுனுக்கும் அதிகமான தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

காலபைரவர் கோயில், அதியமான் கோட்டை காவல்நிலையத்துக்கு மிக அருகில் உள்ளது. மேலும், கோயில் விழாவில் ஆட்சியர், எஸ்.பி. மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதையொட்டி ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வந்தும், போலீஸார் புகார்களை பதிவு செய்ய ஆர்வம் காட்டவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்த நபர்களிடம் விசாரணை செய்து வருவதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x