Published : 24 Feb 2015 05:50 PM
Last Updated : 24 Feb 2015 05:50 PM

வலியோடு வழி தேடும் மாற்றுத் திறனாளி: கின்னஸ் சாதனைக்காக பயிற்சியெடுக்கும் இளைஞர் குழு

சிவகங்கையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரின் அபூர்வ உடற்பயிற்சியாளர் நலச்சங்க குழுவினர், கின்னஸ் சாதனை முயற்சிக்காக தீவிரப் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச் சேத்தியைச் சேர்ந்தவர் நீலமேகம் நிமலன் (35). உளவியலில் பட்டம் பெற்றுள்ள இவர் முன்னாள் குத்துச்சண்டை வீரர்.

கடந்த 2011-ம் ஆண்டு லண்டனில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க, இவர் திருச்சி விமான நிலையம் சென்றபோது நிகழ்ந்த விபத்தில் எட்டு இடங்களில் ஏற்பட்ட எலும்பு முறிவால் வாழ்க்கை முடங்கியது.

தற்போது பெற்றோரை இழந்து, உற்றாரை துறந்து இரு ஊன்றுகோல்களின் உதவியோடு சிவகங்கையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கிறார் நீலமேகம் நிமலன்.

இவர் ஏழ்மையில் உள்ள இளைஞர்களை ஒன்று சேர்த்து, அபூர்வ உடற்பயிற்சியாளர் நலச்சங்கத்தை உருவாக்கி உறுதியும், மன வலிமையும் தரும் உடற்பயிற்சிகளை கற்று தருகிறார்.

இவரோடு விஜயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (26) சைக்கிள், மாரத்தான் போட்டியில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றவர். தற்போது ஆடுமேய்த்துக் கொண்டு உடற்பயிற்சியில் சாதிக்க பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

வறுமையால் படிப்பை பாதியில் நிறுத்திய சாத்தனி கிராமத்தைச் சேர்ந்த ரகுடேவிட்சன், கொத்தனார் வேலை பார்த்துக்கொண்டே பயிற்சி எடுத்து வருகிறார்.

விஜயராதா (26), சதீஷ்குமார் (23), ராஜயோகன் (25), நந்தகுமார் (24), கண்ணன், பாரதி ஆகியோரும் நலச்சங்கத்தில் உள்ளனர்.

தண்டால் பயிற்சியில் சாதனை

தரையில் படுத்து ‘தண்டால்’ எடுக்கும் பயிற்சியை இக்குழுவினர் நுணுக்கமாகவும், அதிவேகத்துடனும் செய்கின்றனர். தரையில் இருந்து 2 அடி உயரத்துக்கு ஆகாயத்தில் பறந்து தண்டால் எடுக்கின்றனர். கம்பியில் தலையை கீழே வைத்து கால்களை மேல்நோக்கி நீட்டி பயிற்சி எடுக்கின்றனர். இசையுடன் கூடிய வகையில் வித்தியாசமான, அபூர்வ உடற்பயிற்சிகளை கற்றுத் தருகின்றனர்.

கைகளில் செய்யும் ‘புஷ் அப்’ பயிற்சிகளை இக்குழுவினர் முழங்கை, மணிக்கட்டு, முஷ்டி, விரல்களில் செய்கின்றனர். ஒரு கால், ஒருகையில் 60 கிலோ மனித எடையைத் தூக்கியபடி தண்டால் எடுக்கின்றனர். இரு உடல்களை ஒருவரது கையில் சமப்படுத்தி அந்தரத்தில் தொங்கி ஆச்சரியப்படுத்துகின்றனர்.

உடற்பயிற்சியால் ஊக்கம்

இதுபற்றி நீலமேகம் நிமலன் கூறும்போது, கார் விபத்தில் 80 சதவீதம் ஊனம் அடைந்தேன். விபத்துக்கு முன் குத்துச்சண்டைக்கு தயாரானபோது மேற்கொண்ட பயிற்சிகளையே தற்போது தொடர்ந்து செய்து வந்ததால் மருத்துவம் தராத சக்தியை உடற்பயிற்சி தந்தது. ஆனால், ஊன்றுகோல் உதவியுடன்தான், எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும்.

அமெரிக்காவின் ஜாக் லாலனே என்பவரின் ‘புஷ் அப்’ பயிற்சிதான், இதுவரை பெரிய சாதனையாக உள்ளது. அதனை விஞ்சும் வகையில் ‘புஷ் அப்’ பயிற்சியில் கின்னஸ் சாதனை செய்ய தயாராகி வருகிறோம்.

அதேபோல், ‘பிளையிங் புஷ் அப்’ பில் ஒரு நிமிடத்தில் 44 முறை உயரே பறக்கும் பயிற்சியை இதுவரை யாரும் செய்ததில்லை. இதற்கு யாரை அணுகுவது என்றுதான் தெரியவில்லை. அரசின் விளையாட்டு நலத்துறை ஆதரவளித்தால் சாதனை படைப்போம் என நம்பிக்கை உள்ளது. மாணவர்களுக்கு இலவசமாய் பயிற்சி அளிக்கவும் தயார் என்கிறார். இவரது செல்போன் எண் 96003 56503.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x