Published : 10 Feb 2015 01:38 PM
Last Updated : 10 Feb 2015 01:38 PM

மக்கள் நம்பிக்கையே மகத்தான வெற்றிக்கு அடிப்படை: ஆம் ஆத்மிக்கு ராமதாஸ் வாழ்த்து

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

"டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கருத்துக்கணிப்புகளையும் கடந்து ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றியை பெற்றிருக்கிறது. மொத்தமுள்ள 70 இடங்களில் 65 இடங்களை வென்று ஆட்சி அமைப்பது சாதாரணமான ஒன்றல்ல.

ஆளும்கட்சியின் அனைத்து பலங்களையும் மீறி அசாதாரணமான வெற்றியை குவித்துள்ள அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆம் ஆத்மிக் கட்சியின் வெற்றிக்கான காரணங்களை அலசி ஆராயத் தேவையில்லை. அதன் வெற்றிக்கான காரணம் மிகவும் எளிமையானது. அரசு நிர்வாகத்தில் ஊழல் மலிந்து கிடந்த நிலையில், மாற்றம் வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் மக்களின் மனக் குமுறல்களை உணர்ந்திருந்தார்; உணர்வுகளை மதித்தார். இதற்கெல்லாம் மேலாக தங்களின் எதிர்பார்ப்புகளை அர்விந்த் கேஜ்ரிவால் நிறைவேற்றுவார் என்று மக்களும் நம்பினார்கள்.... அதனால் ஆட்சியை அவரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். ஆம் ஆத்மியின் வெற்றி ரகசியம் இதுதான்.

அதேநேரத்தில் இந்த வெற்றியை அர்விந்த் கெஜ்ரிவால் பொறுப்புடன் கையாள வேண்டும்; கடந்த காலங்களில் செய்தது போன்ற தவறுகளை அவர் மீண்டும் ஒருமுறை செய்துவிடக்கூடாது. இந்த அளவுக்கு பெரிய வெற்றி எனக்கு அச்சத்தைக் கொடுத்திருக்கிறது என்று அர்விந்த் கேஜ்ரிவால் கூறியிருப்பதில் இருந்தே அவர் மக்கள் விரும்பும் ஆட்சியைத் தருவார் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

டெல்லி வாக்காளர்கள் எத்தகைய மனநிலையில் இருந்தார்களோ, அதே மனநிலையில் தான் தமிழக வாக்காளர்களும் இருக்கிறார்கள். தமிழகத்தில் தலைவிரித்தாடும் ஊழல்களால் மனம் வெறுத்துப் போயிருக்கும் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த உண்மை அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்று நம்புகிறேன். டெல்லி முதல்வராகவிருக்கும் அர்விந்த் கெஜ்ரிவாலை மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்."

இவ்வாறு கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x